நல்லிணக்க அடிப்படையில் சேர்ந்து இயங்க வேண்டும் என்பதற்காகவே இயங்குகின்றோம் – கலையரசன்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எந்த அபிவிருத்தியையும் நிலைநிறுத்தி அரசுடன் பேரம் பேசவில்லை மாறாக எமது மக்களின் நீண்ட நாள் பிரச்சனைக்கு இறுதியானதும், நிரந்தரமான தீர்வினை பெறுவதற்கே அரசுடன் போராடி வருகின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

கல்முனை பெரியநீலாவணை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் 2017ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் இல்ல விளையாட்டு போட்டியானது  (09) வித்தியாலய பிரதி அதிபர் என்.கமலநாதன் தலைமையில் பெரியநீலாவணையில் புதிதாக அமைக்கப்பட்ட மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கௌரவ அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தொடர்ந்து உரையாற்றுகையில்..

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் வீதாசாரத்தில் குறைந்தளவு இருப்பதன் காரணமாக பொருளாதார ரீதியாக பல பின்னடைவுகளை சந்தித்து வருகின்ற ஒரு இனமாக இருந்து கொண்டு வருகின்றோம்.

இந்த நாட்டிலே ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் த.தே.கூட்டமைப்பானது எதிரணியில்தான் இருக்கின்றது காரணம் மக்களினது பிரச்சனைகளை இந்த சந்தர்ப்பத்திலே தீர்க்க வேண்டும் அத்தோடு வடகிழக்கு பிரதேசத்தில் நிலையான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதுதான் எமது இலக்கு அதனை அடைவதற்கு நாங்கள் பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி இருக்கின்றது.

பெரிய நீலாவணை கிராமமானது எல்லையில் அமைந்திருந்ததன் காரணமாக இங்குள்ள மக்கள் பெரும் துன்பதுயரங்களை சந்தித்திருக்கின்றார்கள் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த கல்வித்துறையானது யுத்த சூழல் நிலவியகாலகட்டத்தில் கல்வியில் பல பின்னடைவுகளை எதிர்நோக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருந்ததுடன் பல கற்றறிவாளர்களை இழக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

குறிப்பாக தமிழர்கள் வாழ்ந்த பல பிரதேசங்களில் உள்ள எல்லை கிராமங்கள் இருந்த இடமே தெரியாதபடி அழிக்கப்பட்ட வரலாறுகளே உள்ளது.

கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் மாகாணசபையில்  தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது ஒரு நல்லிணக்க அடிப்படையில் சேர்ந்து இயங்க வேண்டும் என்பதற்காகவே இயங்குகின்றோம் அப்படி இருந்த போதும் ஒரு சில விடயங்களை எங்களால் சாதிக்க முடியாத நிலையும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

பாடசாலையின் அபிவிருத்தி என்பது வெறுமனே ஆசிரியர்களையும், அதிபர்களையும் உள்ளடக்கியதாக இருக்காது மாறாக அந்தப்பிரதேசத்தில் இருக்கின்ற பெற்றோர்கள், நலன் விரும்பிகள், இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட்டால் மாத்திரந்தான் கல்வி வளர்;ச்சியில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனவும் கூறினார்.