திருமலையில் காட்டில் தேன்வெட்டச்சென்ற பூர்வீக குடிகள் மரம்வெட்ட வந்ததாக பொலிசாரால் கைது தண்டமும் கட்டினர்.

காட்டில் தேன்வெட்டச்சென்ற பூர்வீக குடிகள் மரம்வெட்ட வந்ததாக பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் தண்டம் கட்ட நேர்ந்ததாக பூர்வீக குடிகள் அமைப்பின் தலைவர் எஸ்.கனகசிங்கம் தெரிவித்தார்.

எமது பூர்விக குடிகளின் மக்கள் தமது பூர்வீக மான தொழில்களைச் செய்யமுடியாத நிலமை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கவலை வெளியிட்டார்..
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் திருகோணமலை கிண்ணியாவிற்கு மேல் உள்ள குரங்கு பாஞ்சான் காட்டுப்பகுதியில் வழமைபோல் தேன் வெட்டும்தொழிலுக்கு, மூதுார் பிரிவில் உள்ள பாட்டாளிபுரத்தைச்சார்ந்த மூவர் சென்றதாகவும்,
ஒரு நாள் தொழில் செய்து விட்டு மறுநாள் 08.05.2017 அவ்வாறே சென்ற போது நண்பகல் வேளையில் தம்மை வழிமறித்த வான் அலபிரதேசத்தைச்சார்ந்த 4 பொலிசார் தமது உறுப்பினர்களில் ஒருவரை காட்டுமரம் வெட்டியதாக குற்றம் சாட்டி 09.05.2017 கந்தளாய் நீதிமன்றில் நிறுத்தி 10000ரூபாய் தண்டப்பணம் கட்டியே வெளியேறிய தாகவும் தமது உறுப்பினர்கள் முறையிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எமது மக்கள் மூதுார் பிரிவில் உள்ள சந்தோசபுரம், பாட்டாளிபுரம்,வீரமாநகர், நீலாக்கேணி,நல்லுார், போன்ற இடங்களில் வசிப்பதாக கூறும் சங்கத்தின் தலைவர், தமது காணிகளை ஒருபுறத்தில் பலர் அபகரிக்கின்றனர் என்று பார்த்தால், மறுபுறத்தில் எமது மக்கள் அன்றாடப்பிழைப்பும் செய்யமுடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அண்மையில் கொழும்பில் மேதினத்தில் ஐதேக கட்சி அலுவலகத்தில் இவர்கள் சென்று, தமது பிரச்சனைகளையும் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் தண்டம் கட்டிய பூர்விக குடிமகனான பாட்டாளிபுரத்தைச்சாரந்த செல்லக்குட்டி பொன்னம்பலம் (60) குறிப்பிடுகையில்,
குறித்த நாளன்று நானும் என்னுடன், எமது கிராமத்தைச்சார்ந்த ஜிவரெட்ணம் பரராஜசிங்கம்(36)என்பவரும், காளிராசா பொன்னம்பலம் (57) என்பவருமாக மூவரும் எமது வழமையான தொழிலுக்காக குரங்கு பாஞ்சான் காட்டுப்பகுதிக்குச்சென்றோம்.

எம்மிடம் சிறிய சிறிய கோடரிகள் கத்திகளும் இருந்தன. முதல்நாள் சென்று சிறியளவு தேன் எடுத்து விட்டு திரும்பிய நாங்கள் மறுநாளும் சென்றோம். மதியம் நண்பகல் வேளை எம்மை கந்தளாய் வான் எலயைச்சார்ந்த நான்கு பொலிசார் சந்தித்தனர்.

அவர்கள் எமது தேனை வாங்கி ருசித்தும் பார்த்தனர். பின்னர் எமது சிறிய கோடரிகளை வாங்கிவிட்டு காட்டு மரம் தறித்ததாக கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். நாங்கள் அழுது பலமுறை எமது தொழில் முறையை சொன்னோம். அவர்களில் இருவர் தமிழில் கதைத்தனர். மற்றயவர் இருவரும் சிங்களத்தில் பேசினர்.

நாங்கள் என்ன கத்தியும் அவர்கள் தேனையும் ருசிபார்த்து விட்டு என்னை மட்டும் மரம் வெட்டியதாக பொலிசில் ஒப்படைத்தனர். பின்னர் கோடாரிக்கு நம்பரெல்லாம் போட்டு என்னையும் நீதிமன்றில் ஆஜார் செய்தனர் .

நீதிமன்றம் 10000ரூபாய் கட்டுமாறு தெரிவித்தது.சட்டதரணிக்கும் 2000 காசு கொடுத்தே வெளியே வந்தோம். தற்போது எறிக்கும் வெயிலில் எமது சேனை வயலும் செய்ய முடியவில்லை. எமது பூர்வீக தொழிலான வேட்டை யாடுதல், தேன் எடுத்தலையும் செய்ய முடியவில்லை. நாம் என்ன செய்வதென்றே தெரியாது உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

பொன.சச்சு