மேதினமும் மே பதினெட்டும்

1886 இல் சிக்காக்கோ வீதிகளும் 

2009 இல் முள்ளிவாய்க்கால் கடற்கரையும்

எட்டு மணி நேர வேலை, அதுக்கு மேலை போனால் ஓவர் டைம். தொழிலாளர்கள் இன்சூரன்ஸ், ஈபிஎவ், ஈடிஎவ், பென்ஷன்…  மற்றும் இன்னோரன்ன தொழிலாளர் வசதிகளை அனுபவித்து கொண்டிருக்கும் IT குஞ்சுகளும், சூப்பர் மார்க்கெட் சூப்பர்வைசர்களும் மற்றும் யாவரும் தெரிந்து கொள்ளுங்கள்:

இன்று நீங்கள் அனுபவிக்கும் வசதிகளுக்காக உங்கள் முன்னோர் ஏறத்தாள 50 வருடங்கள் போராடினர்.  அதன் உச்சமாக அமெரிக்காவில்   1886, மே 1 தொடங்கியது அந்த மாபெரும் தொழிலாளர் போராட்டம்.  போராட்டம் என்றவுடன் ஆயுதப் போராட்டம் என்று முடிவெடுக்க வேண்டாம். இது வேலை நிறுத்தம் மற்றும் ஊர்வலங்கள்.

இதன் தொடர்ச்சியாக,

மே 3, 1886 அன்று சிகாகோவில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கூட்டம் நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர்.

அடுத்த நாள் (மே 4) இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள்.

2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார்.

பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர்.

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் தொழிலாளர்கள் இறந்தனர். பல தொழிலாளர்கள் படுகாயமுற்றனர்.

கூட்டத்தில் வெடிகுண்டு வீசிய குற்றத்துக்காக தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு 7 பேருக்கு தூக்குத் தண்டனையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை (Haymarket Massacre) என அழைக்கப்படுகிறது.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம்…

அந்த வெடிகுண்டு வீச்சு!

உண்மையில் அந்த வெடிகுண்டு வீசப்பட்டதன் காரணமாகவே பொலிசார் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தொழிளார்கள் ஏந்திச் சென்ற “வெள்ளைக் கொடிகள்” இரத்த வெள்ளத்தில் தோய்ந்து செங்கொடிகள் ஆயின.

பொலிசார் தொழிலாளர்களை கண்மூடித்தனமாக தாக்கினர். கைது செய்தனர். சித்திரவதை செய்தனர்.

அதே நேரம் 8 மணி நேர வேலையை வலியுறுத்திய தொழிலாளர் போராட்டம் உலகெங்கும் பரவுவதற்கும், தொழிலாளர்கள் மத்தியில் தமது உரிமைகள் பற்றிய பெரும் விழிப்புணர்வு வருவதற்கும், அவர்கள் எழுச்சி பெறுவதற்கும் அடித்தளமாக இருந்தது இந்த ஹேமார்க்கெட் படுகொலைதான்.

நல்லகாலம் அந்த நேரத்தில் நம்ம ஊர் இடதுசாரிகள் இருக்கவில்லை. இருந்திருந்தால் வெடி குண்டு வீசியதை சாட்டாக வைத்து அந்த போராட்டத்தை வெறும் மாபியா தாக்குதல் என்று வாதிட்டிருப்பர்.

அதிஷ்டவசமாக அக்காலத்தில் எங்கெல்ஸ், லெனின் போன்றவர்கள் இருந்தார்கள். அவர்கள் இந்த படுகொலை நாளை தொழிலாளர் எழுச்சிக்குரிய நாளாக்கினர். போராட்டம் தொடங்கிய மே 1 ஐ தொழிலாளர் தினம் ஆக்கினர். தொழிலாளர்கள் உரிமைக்கான போராட்டம் உலகெங்கும் பரவியது. இன்று நாமெல்லாம் அதன் பலன்களை அனுபவித்து கொண்டிருக்கிறோம்.

முள்ளிவாய்கால் மே பதினெட்டும் அத்தகைய ஒரு நாளே.

எப்படி ஹேமார்க்கெட் படுகொலை உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கான அத்திவாரமாயிற்றோ…

அவ்வாறே உலகில் உள்ள அனைத்து ஒடுக்கப்படும் இனங்களினதும் எழுச்சிக்கான புதிய ஆரம்பமாகி நிற்கிறது முள்ளிவாய்க்கால் இனவழிப்பு.

 

Gnanadas Kasinathar