தமிழர்களின் இன்ப, துன்பங்கள் கூத்துப்பிரதிகளாக வெளிவர வேண்டும்.

(படுவான் பாலகன்) தமிழர்களின் சமகால பிரச்சினைகள், இன்ப, துன்பங்கள் கூத்துப்பிரதிகளாக வெளிவர வேண்டும். என மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.
கொல்லநுலை, தேவிலாமுனை கிராம மக்களினால் செவ்வாய்க்கிழமை(09) இரவு அரங்கேற்றம் செய்யப்பட்ட மகாபாரதம் 17ம், 18ம் போர் வடமோடிக் கூத்து ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டார்.


புராண, இதிகாச கதைகளை கூத்துக்களாக பாரம்பரியமாக ஆடி, அக்கதைகளை மக்கள் மத்தியிலும் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறான புராண, இதிகாச கதைகளை கூத்தாக எழுதி ஆடுவதோடு நிறுத்தி விடாமல், தமிழர்கள் சமகாலத்தில் எதிர்க்கொண்ட இன்ப, துன்பங்களையும் கூத்துக்களாக எழுதி, கூத்துப்பிரதிகளை பயன்படுத்தி கூத்தினை ஆடி அரங்கேற்றி, எமது இளம் தலைமுறையினருக்கு ஒரு வரலாற்று பொக்கிசமாக உவந்தளிப்பதற்கான ஏற்பாடுகளை கூத்து எழுதுவதில் கைதேர்ந்த புலவர்களும், அண்ணாவிமார்களும், கூத்தர்களும் முன்னெடுக்க வேண்டும்.
கடந்த சில வருடங்களாக கூத்துக்கள் ஆடுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. இத்தோடு நின்றுவிடாது, தொடர்ச்சியாக ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு கூத்துக்களாவது, ஆடி அரங்கேற்ற வேண்டும். அவ்வாறான கூத்துக்கள் சமகால பிரச்சினைகளை தழுவியதாக இருக்க வேண்டும். வளர்ந்து வருகின்ற இளம் கலைஞர்களுக்கு சிறந்த இடத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டும். கூத்துக்கலையில் கைதேர்ந்த கலைஞர்களும் தமக்கு தெரிந்ததை முழுமையாக இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். என மேலும் கூறினார்.