மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உடற்கல்வி பாடத்திற்கு 17வெற்றிடங்கள்.

(படுவான் பாலகன்)  மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உடற்கல்வி பாடத்திற்கு 17 ஆசிரிய வெற்றிடங்கள் நிலவுகின்றன. இதனை மாகாணகல்வி அமைச்சு நிவர்த்தி செய்து வழங்க வேண்டும். என மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய, வலயமட்ட விளையாட்டுப் போட்டி திங்கட்கிழமை(08) மாலை நடைபெற்ற நிகழ்வில்  தலைமையுரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

வலயக்கல்விப் பணிப்பாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் எந்தவொரு கோட்டத்திலும் 400மீற்றர் அளவுள்ள விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் விளையாட்டுப் போட்டிகள் நடாத்துவதற்கு சிரமங்களினை எதிர்கொள்கின்றோம். அதேபோன்று விளையாட்டு உபகரணங்கள் இன்மையினால் பிற வலயங்களிடமிருந்து கடன்பெற்று விளையாட்டுப் போட்டிகளை நடாத்தும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. எமது வலயத்திலே உள்ள மாணவர்கள் விளையாட்டில் உள்ளார்ந்த திறமையை கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான களத்தினை அமைத்துக்கொடுக்க கூடிய வகையில் விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் இருக்கின்றது. எமது வலயத்திலே விளையாட்டுப் பாடசாலையென எந்தவொரு பாடசாலையும் அமைக்கப்படவில்லை. அதேபோன்று உடற்கல்வி பாடத்திற்கு 17ஆசிரியர்கள் வெற்றிடமாக இருக்கின்றனர். இவ்வெற்றிடங்களையும், ஏனைய வசதிகளையும் எமது வலயத்திற்கு ஏற்படுத்துகையில் தேசியமட்ட போட்டிகள் பலவற்றிலும் எமது வலய மாணவர்கள் பிரகாசிப்பர். என்றார்..