நான்கு மாதங்கள் கடந்தும் கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை

(படுவான் பாலகன்) கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு 2017ம் ஆண்டிற்கான இடமாற்றம் வருடம் ஆரம்பித்து நான்கு மாதங்கள் கடந்தும் மேற்கொள்ளப்படவில்லையென மகிழடித்தீவில் திங்கட்கிழமை நடைபெற்ற விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் குறிப்பிட்டார்..

2016ம் ஆண்டும் ஆசிரியர்களுக்கான இடமாற்றம் ஜீன் மாதத்திற்கு பின்பே மேற்கொள்ளப்பட்டது. இதனால் நிருவாக ரீதியாக பல்வேறு சிரமங்களினை எதிர்கொள்ள நேரிட்டது. இந்த வருடத்தின் ஜனவரி மாதத்திலேயே இடமாற்றம் வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டும், அதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டும், நான்கு மாதங்கள் கடந்தும் இன்னும் இடமாற்றம் வழங்கப்படவில்லை. துரிதமாக இடமாற்றித்தினை வழங்குவதற்கான நடடிக்கைகளை கல்வி அமைச்சு எடுக்க வேண்டும்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் கஸ்ட, அதிகஸ்ட பாடசாலைகளை அதிகம் கொண்டிருக்கும் வலயமாக உள்ளது. இவ்வலயத்தில் பாரிய குறைபாடுகள் இருக்கின்றன. கிழக்கு மாகாணசபையின் ஆட்சிகாலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவுபெறவிருக்கின்றது. அதற்கிடையில் பல்வேறு வேலைத்திட்டங்களையும் கல்வி அமைச்சு மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.