காத்தான்குடி பிரதேச செயலகம் காத்தான்குடி வர்த்தக சமூகத்தின் செயற்பாடுகள் முழு நாட்டிற்கும் ஒரு முன்னுதாரணம்

காத்தான்குடி பிரதேச செயலகம் மற்றும் காத்தான்குடி வர்த்தக சமூகத்தின் செயற்பாடுகள் முழு நாட்டிற்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். .


காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட உற்பத்தித் திறன் மேம்பாட்டிற்கு பங்களிப்பு வழங்கியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மற்றும் E – அரச சேவை அங்குரார்ப்பண நிகழ்வு என்பன அண்மையில் காத்தான்குடி பிரதேச சபை கேட்போர்கூட மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸ்ஸம்மில்  தலைமையில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிற்றும் போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்…

தனியார் துறை மற்றும் அரச நிறுவனங்கள் ஆகியன இணைந்து ஒருமித்து பயனிப்பதனூடாக அடைந்து கொள்ளக்கூடிய வெற்றிக்கு ஒரு உதாரணமாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.

எமது பிரதேசத்தில் வர்த்தகத்தினை மேம்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இலகுவான சேவையினை பெற்றுக்கொடுக்கும் முகமாக புதிய தொழில்நுட்பங்களும் பல்வேறு உற்பத்திகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யுத்தத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்ட மிகவும் பின்தங்கிய மாகாணமான எமது கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் இத்தகைய அறிவு ரீதியிலான புதிய சிந்தனைகள் மிகவும் வரவேற்கத்தக்கதோடு அத்தகைய சிந்தனையாளர்களை கௌரவித்து ஊக்கமளிக்க வேண்டிய ஒரு தேவைப்பாடும் காணப்படுகின்றது.

அத்தகைய ஒரு விடயம் இன்று மிகவும் சிறந்த முறையில் காத்தான்குடி பிரதேச செயலகத்தினூடாக நடைபெற்று வருகின்றது. காத்தான்குடி பிரதேச செயலகத்திலுள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஒருமித்த செயற்பாடு மற்றும் அர்ப்பணிப்பு மிக்க சேவையின் மூலமாகவே இத்தகைய பல்வேறு விடயங்கள் மிகவும் வெற்றிகரமாக செயற்படுத்தப்படுவதோடு கடந்த வருடம் இலங்கையிலுள்ள சிறந்த பிரதேச செயலகங்களுள் மூன்றாவது இடத்தினையும் எமது பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டுள்ளமையானது மிகவும் பாராட்டத்தக்கதொரு விடயமாகும் என தெரிவித்தார்.