மாணவியின் உயிரிழப்பால் கல்முனையில் பெரும் சோகம்

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது..
உயிரிழந்த மாணவி நற்பிட்டிமுனை பிள்ளையார் கோவில் வீதியைச்சேர்ந்த புவனேந்திரன் கீர்த்தனா (16 வயது) என்பவராவார்.

கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் க.பொ.த சாதாரண தரத்தில்(தரம் – 11); கல்விபயிலும் குறித்தமாணவி இம்முறை பரீட்சைக்கு தோற்றவிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
க.பொ.த சாதாரணதரத்தில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பிரத்தியோக மேலதிக வகுப்புக்கள் பாடசாலையில் நடைபெற்று வருகின்றது.
இந் நிலையில் திங்கட்கிழமை மேலதிக வகுப்பாக தமிழ்ப்பாடம் நடைபெற்றுள்ளது. இவ் வகுப்பு முடிவடைந்து 2.20 மணியளவில் மாணவர்கள் வீடு செல்வதற்காக கலைந்து வந்துள்ளனர். அச் சமயம் வகுப்பு முடிந்து வந்த குறித்த மாணவி திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார். இவர் மயங்கி வீழ்வதை அவதானித்த அதிபர், ஆசிரியை, மாணவர்கள் ஓடிச்சென்று பிடித்து முதலுதவி வழங்கியதுடன் பாடசாலைமுன்பாக நின்றிருந்த முச்சக்கர வண்டியில் உடன் மாணவியை ஏற்றிக்கொண்டு கல்முனை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அங்கிருந்து அம் மாணவி மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பயனளிக்காது (இன்று09) செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கல்முனைப் பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

Thujiyanthan Sellathampy