நாம் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டமையானது பஞ்சு மெத்தையில் படுத்துறங்குவதற்காக அல்ல

எமது மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் நாங்கள். எமது மக்களுக்கு ஒன்றென்றால் துடித்துப் போகவேண்டியவர்கள் நாங்கள். நாம் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டமையானது பஞ்சு மெத்தையில் படுத்துறங்குவதற்காக அல்ல. மாறாக, பல்வேறு நெருக்கடிகளுக்கும், மக்களின உரிமைகளுக்கும் விடைகாண்பதற்காகவே நாம் தேர்தலில் போட்டியிட்டோம். எமது மக்களும் அதற்காகவே எம்மைத் தெரிவு செய்து அனுப்பினார்கள். அந்தப் பணியைச் செவ்வனே செய்ய வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிக்கும் குறிப்பாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும் உள்ளது. இந்தப் பொறுப்பிலிருந்து யாரும் பின்வாங்க முடியாது.  என  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்  இணையதளம் ஒன்றின் நேர்காணலுக்கு பதிலளிக்கையில் குறிப்பிட்டுள்ளார்..

 

ஆனால் கூட்டமைப்பின் தலைமைக்கட்சி என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இலங்கை தமிழரசுக் கட்சி மக்களின் போராட்டங்களில் பங்கெடுக்காமல் இருப்பதுடன், அத்தகைய போராட்டங்கள் தென்னிலங்கையில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மகிந்த தரப்பினர் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறிவிடுவர் என்றும் தனது கையாலாகத் தனத்திற்கு காரணம் கற்பிக்கின்றது. மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு வலுக்கும்போதெல்லாம் வேறுவழியின்றி தனது நிலைப்பாட்டை மாற்றி, தானும் தனது ஆதரவை வழங்குகிறது. ஒரு தலைமைக்கட்சி மக்களுக்குத் தலைமை தாங்கக் கடமைப்பட்டது என்பதை மறந்து அல்லது அதிலிருந்து விலகி, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தனது நிலையை மாற்றிக்கொள்கிறது. இந்தக் கட்சியின் எதிர்காலத்தைப் பற்றி முடிவெடுக்கும் உரிமையை எமது மக்களுக்கு மட்டுமே உரித்துடையது.
மக்கள் தங்களை விரும்பாத எவரையும் ஏற்க மாட்டார்கள். ஒரு தலைவர் என்பவர் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவராகவும் தான் சார்ந்த சமுதாய மக்களின் அன்பிற்கும் பாசத்திற்கும் உரித்துடையவராகவும் இருத்தல் வேண்டும். ஆனால் கூட்டமைப்பின் தலைவரோ மக்களைச் சந்திப்பதற்கே விருப்பமற்றவர். ஆனால் தேர்தலில் மட்டும் தமது கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரும்புபவர்..

\
மறுபுறத்தில் ஏனைய இரண்டு அங்கத்துவக் கட்சிகளும்கூட மக்கள் போராட்டங்களை முன்னெடுக்காமல் இருப்பதற்கான காரணங்கள் என்னவென்பது புரியாத புதிராகவே உள்ளது. எம்மிடம் கேட்ட கேள்வியை நீங்கள் அவர்களிடம் கேட்டு விடைகாண்பது நன்று. மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து அதுகுறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களைப் போராட்டத்திற்குத் தயார்படுத்தி அணிதிரட்டி வழிநடத்தி கோரிக்கைகளை வெற்றியடையச் செய்வதற்கே கட்சிகள் உதயமாகின்றன. ஆனால் இங்கு மக்கள் தாங்களாகவே அணிதிரண்டு தமது கோரிக்கைகளைத் தெளிவாக முன்வைத்துள்ளனர். ஒரு கட்சியின் முக்கியப் பணிகளில் பாதியளவு குறைந்துவிட்டது. அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மக்களுக்குத் தலைமைதாங்குவதும் மக்களின் கோரிக்கைக்கு அடிப்படைக் காரணமான அரசியல்தீர்வை முன்வைத்து மக்களுக்கு அரசியல் தெளிவூட்டுவது மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு எஞ்சியுள்ள பணி. இதனைச் செய்யாமல் மக்களின் போராட்டம் நியாயமானது, நாங்களும் ஆதரவு தருகிறோம் என்று மூன்றாவது மனிதரைப்போல் நடந்துகொள்வது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு அழகல்ல.
எம்மைப்பொறுத்தவரை நாம் என்றும் மக்களுடனேயே இருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். எம்மக்கள் எதிர்கொண்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளும் எமக்கும் இருக்கின்றன என்ற உணர்வின் அடிப்படையிலேயே நாம் எமது கடமைகளை முன்னெடுத்து வருகின்றோம். நாம் மேலிருந்து நேரடியாக மக்கள் பிரதிநிதியாக வந்துவிடவில்லை. எமது உரிமைக்கான போராட்டத்தின் அனைத்துப் படிமுறைகளிலும் பங்காற்றியதனூடாகவே இன்று நாம் மக்கள் பிரதிநிதியாக கடமையாற்றுகின்றோம். இன்றைய மக்கள் பிரதிநிதிகளில் பெருமளவினோர் இதற்கு முன்னர் செயற்றிறன் மிக்க அரசியல் கட்சியில் அங்கத்தவர்களாக இருந்து கட்சியின் அமைப்புவிதி மற்றும் அரசியற் கொள்கை ஆகியவற்றைக் கடைப்பிடித்து வந்த அனுபவமற்றவர்கள். இதுவும் அவர்கள் மக்கள் பிரச்சினைகளை தமது கைகளில் எடுத்து போராட்டக் களத்திற்கு வரத் தயங்குவதற்கான பிரதான காரணமாகும்.