பிராந்திய சொற்கள் அநாகரீகம் என எண்ணியதால் தமிழின் ஆழத்தினை இழந்திருக்கின்றோம்.

(படுவான் பாலகன்) ஒவ்வொரு பிராந்தியங்களிலும் பாவிக்கப்படும் தமிழ் சொற்கள் அநாகரீகமென நினைத்து, எழுத்து வடிவிலான தமிழ் சொற்களை மாத்திரம் அன்றாடம் பிரயோகிக்கின்றமையினால் தமிழின் தொன்மையையும், சுவையையும் இழந்திருக்கின்றோம். என மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.

சிறுபொழுதில் கூடல் என்ற தொனிப்பொருளில் முனைக்காடு உக்டா சமூக வளநிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை(07) மாலை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்..

கலாசார இணைப்பாளர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில், பிராந்தியங்களுக்கு, பிராந்தியம் வெவ்வேறுபட்ட தமிழ் சொற்கள் அப்பிராந்தியங்களில் வாழும் மக்களால் பாவிக்கப்பட்டன. அவ்வாறான சொற்கள் அனைத்தும் தமிழின் தொன்மையையும், ஆழத்தினையும், சுவையையும் பறைசாற்றியிருந்தன. தற்போதைய சமூகம் அச்சொற்களை பயன்படுத்த தவறியிருக்கின்றது. இதனால் பல சொற்கள் வழக்கொழிந்திருக்கின்றன. அதேவேளை அவ்வாறான சொற்களை பாவிப்பது அநாகரீகம் எனவும் எண்ணுகின்றோம். இதனால் பல மொழிகளையும் தமிழோடு இணைத்து, வேறுமொழி போன்று தமிழை பேசும் வேதனையான நிலையேற்பட்டிருக்கின்றது. இதனால் தமிழின் சுவையும் இல்லாமல் சென்றிருக்கின்றது. பிறக்கின்ற பிள்ளைகளுக்கும் தூய தமிழில் பெயர்களை சூட்டுவதற்கு தவறிவருகின்ற இனமாகவும் தமிழினம் இருந்து கொண்டிருக்கி;றது. அழிவடைந்து செல்லும் மொழிகளில் தமிழும் இருப்பதினால், பிராந்திய மொழிகளை கட்டிக்காத்து, மொழியை வளர்க்க இளைஞர், யுவதிகள் ஒன்றுசேர வேண்டும் என்றார்.