கூத்து ஆடப்பட்டு இடையில் கலைந்து சென்றால் அச்சமூகம் முகாமைத்துவமற்ற சமூகமாகும்.

(படுவான் பாலகன்) ஒரு சமூகத்தில் கூத்து ஆடப்பட்டு, அவை அரங்கேற்றம் செய்யப்படாமல் இடையில் கலைந்து செல்லுமாகவிருந்தால், அச்சமூகம் தன்னை முகாமைத்துவம் செய்துகொள்ள முடியாத சமூகம் என்பதை காட்டிக்கொள்கின்றது. என கிழக்கு பல்கலைக்கழக சுவாமி அழகியற் கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் சி.ஜெயசங்கர் தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை(06) இரவு நடைபெற்ற அரிச்சந்திர புராணம் வடமோடிக்கூத்து அரங்கேற்று நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்டார்..

கூத்து ஒன்றின் மூலமாக அச்சமூகமே ஒன்று சேருகின்றது. முரண்பாடுகளை தீர்த்தல், ஆற்றல், முகாமைத்துவம் இதுபோன்ற பல விடயங்கள், இதன் மூலமாக வளர்க்கப்படுகின்றன. கூத்தின் பிரதிபலிப்பின் ஊடாக, எழுத, படிக்க தெரியாதவர்கள் பலர் வித்துவான்கள், அறிஞர்களாக இருந்திருக்கின்றனர். ஒவ்வொரு கிராமங்களும் இவ்வாறானவர்களை பெயர்சொல்வார்கள். கூத்து ஆற்றுகை செய்யப்படும் களங்களும், அங்கு இடம்பெறும் உரையாடல்கள், பயில்வுகள், தலைமுறைகளிடமிருந்து பெற்ற அனுபவங்கள் என பல்வேறு விடயங்கள்தான் அவற்றினை சாத்தியமாக்குகின்றது. நகரங்களிலும், பெருநகரங்களிலும் கூத்துக்களை கொண்டு செல்லவேண்டியது தேவையாக இருக்கின்றது. அத்தகைய செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். எனவும் மேலும் கூறினார்.