தமிழரசு கட்சி உறுப்பினர்களை கடும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறு – சம்பந்தனுக்கு ஆனந்தசங்கரி கடிதம்.

இராஜதந்திர அணுகுமுறையை தமிழரசு கட்சியினர் கற்றுக்கொள்ள வேண்டும். என தலைப்பிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கு இன்று(08) கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தங்கள் கூட்டணியிலுள்ள தமிழரசு கட்சி உறுப்பினர்களை கடும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறு வேண்டுவதற்கே மிக அக்கறையுடன் இக்கடிதத்தை எழுதுகிறேன். ஒரு நாட்டை மட்டுமல்ல அந்த நாட்டு மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் அவர்கள் அறிக்கைகள் விட முடியாது. சிந்தனையற்ற செயற்பாடுகள், அறிக்கைகள் போன்றவை கூடுதலாக தமிழரசு கட்சி உறுப்பினர்களிடமிருந்து வெளிவருவது, இந்தியாவுடனான நட்பையும் நல்லெண்ணத்தையும் கடுமையாக பாதிக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்களோ நானறியேன். ஏனைய உறுப்பினர்கள் செய்யும் தவறு இத்தகைய உறுப்பினர்களுடைய நடவடிக்கைகளை கண்டும் காணாமலும் அமைதியாகவும் இருப்பதே. சில சமயம் அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கலாம். நான் பகிரங்கமாக வெளிப்படுத்தாத, சில காரணங்களால், இலங்கையில் செயற்படும் இரு நாடுகளுக்கிடையிலுள்ள முரண்பட்ட செயல்கள், இரண்டு நாடுகளுக்கிடையில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில், விரிசல்களை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம். இதனால் எமது அப்பாவி மக்களே கடுமையாக பாதிக்கப்படுவர். எமது சிந்தனையற்ற உரைகளால் அப்படி நடப்பதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. அரசியலில் மிகவும் அனுபவமுடையவரும், இக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கும் நீங்கள் இந்தியாவுடன் படிப்படியாக குறைந்துவரும்;; நட்புறவையும், நல்லெண்ணத்தையும் வளர்த்தெடுக்க தவறி விட்டீர்கள்..
முதலாவதாக மிகமுக்கியமாக அறியவேண்டியது யாதெனில் இந்தியா எமது அயல்நாடு என்பதையும், எமக்கு இன்னல்கள் ஏற்படும் போதெல்லாம் எமக்கு அத்தியாவசியமாக தேவைப்படும், வைத்தியக்குழு, உணவு போன்றவற்றுடன் முதன்முதலில் வந்திறங்குவது இந்தியாவே. உதாரணமாக கடைசியாக ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது, தமது நாட்டில் செய்ய வேண்டிய பல இருந்தும் இந்திய குழுவினர் எமக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களுடன் வந்து இன, மத, பிரதேச வேறுபாடின்றி தேவைக்கேற்றவாறு செயற்பட்டனர். இலங்கைக்கு ஏதாவதொரு அனர்த்தம் ஏற்பட்டால் அத்தியாவசிய உதவிப் பொருட்களுடன் முதன்முதலில் வந்திறங்குவது இந்தியா என்பது புதிதாக உருவாகிவரும் நடைமுறையாகும். யுத்தம் முடிந்த பின் பலருக்கு வீடுகளை கட்டுவதற்குரிய உதவிகள் மட்டுமல்ல சிறிதளவிலேனும் குடும்பத்தையும் கொண்டு நடத்தக்கூடியளவுக்கு வேறு சில உதவிகளும்; கிடைத்தன.
ஆகவே, நெடுந்தூரத்திலிருந்து, பல சிரமத்துக்கு மத்தியில், எமது நாட்டு மக்களுக்கு உதவ முன்வருகின்றவர்களை, பல தரப்பட்ட அறிக்கைகளை விடுத்து, அவர்களின் மன உணர்வுகளை புண்படுத்த வேண்டாமென ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
எமது இனப்பிரச்சனை தீர்வுக்காக 30 ஆண்டுகளுக்கு மேல் பல சிரமத்தின் மத்தியில் செயற்பட்ட இந்திய அரசின் செயற்பாட்டை இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். எமது விடயத்தில் அவர்கள் சம்பந்தப்பட்ட படியினால் அவர்கள் இழந்தமை பிரதம மந்திரியாக இருந்த அன்னை இந்திராகாந்தி, பிரதம மந்திரியாக வரவிருந்த கௌரவ ராஜீவ்காந்தி, பல போர்வீரர்களுடன் இன்னும் பலரும் பலவும். இந்தியா இழந்த நஷ்டத்தை பணத்தால் அளவிட முடியாது. எமது பிரச்சினையை தீர்த்து வைக்கக்கூடிய தகுதியுடைய நாடு இந்தியா மட்டுமே. ஆகவே இறுதித் தீர்வு ஏற்படும்வரை அதனுடைய செயற்பாட்டில் எவரும் தலையிடக்கூடாது.
எமது பிரச்சினைக்கு ஆதரவு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தென்னாபிரிக்காவுக்கு சென்றமை பல இந்தியர்களை மட்டுமல்ல எமது மக்கள் மத்தியிலும் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதை நீங்கள் கவனித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். அண்மைக்காலத்தில் எமது பிரச்சனைகள் பற்றி இந்தியர்கள் எவரும் பிரஸ்தாபிப்பதில்லை. எனது ஞாபகம் சரியாக இருப்பின் அண்மையில் எமது பிரதம மந்திரியே இது பற்றி குறிப்பிட்டுள்ளார். நீங்களும் உங்களுடைய குழுவினரும் இனப்பிரச்சனை சம்பந்தமாக தென்னாபிரிக்கா சென்றமையும், தென்னாபிரிக்கக் குழு இலங்கைக்கு வந்தவேளை நீங்கள் சந்தித்தமையும் நீங்கள் விட்ட பெரும் தவறென நான் கருதுகிறேன். நான் தென்னாபிரிக்காவுக்கு எதிரானவன் என என்னை நினைக்க வேண்டாம். அந்த நாட்டையும் அதன் மக்களையும் நான் பெருமளவில் நேசிப்பவன். மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் தற்போதைய எமது ஜனாதிபதியை சந்தித்தபோது தென்னாபிரிக்க அரசியல் சாசன பிரதியொன்றை கையளித்து அதில் உள்ளவாறு அவர்களின ‘அடிப்படை சட்டம்’ பகுதியை எமது அரசியல் சாசனத்துடன் இணைக்குமாறும் கேட்டிருந்தேன்.
இறுதியாக எதுவித கருத்தும் தெரிவிக்காது உங்களுடைய சீன விஜயம் எதிர்கட்சித் தலைவர் என்ற கோதாவில் இடம்பெற்றிருந்தாலும்கூட அது தேவையற்ற விஜயம் என ஞாபகமூட்ட விரும்புகிறேன். நான் ஏன் இதனை கூறுகிறேன் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். சீனாவை பெரிதும் மதிக்கின்றவன் நான். ஆனால் நாம் குழப்பமடையாமல் எது செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டியவர்கள்.
குளவிக்கூட்டுக்கு கல்லெறிந்து எவரையும் சங்கடத்திற்குள்ளாக்க நான் விரும்பவில்லை. ஆகவேதான் எந்த விடயத்தையும் நியாயப்படுத்தவில்லை. ஆனால் மக்கள் உங்களிடமிருந்து எதனை எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை அறிந்திருப்பீர்களென நம்புகிறேன். என்று எழுதியுள்ளார்.