உதைபந்தாட்ட போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ண விளையாட்டுக்கழகம் முதலிடம்

(படுவான் பாலகன்) உதைபந்தாட்டம் சூடுபிடித்துள்ள இக்கால சூழ்நிலையில் படுவான்கரை பிரதேச கிராமங்களில் அனைத்துக் கழக வீரர்களும் சிறந்த பயிற்சிகளில்; ஈடுபட்டு வருகின்ற அதேவேளை தமது கிராமத்து உறவுகள் மற்றும்கழக நினைவு தினம் என்பவற்றை நினைவாக கொண்டு சனி,ஞாயிறு தினங்களில் கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டிகளை நடாத்தி வெற்றிபெறும் கழகங்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் பணப்பரிசில்களும் வழங்கி வருகின்றனர். அத்துடன் சிறந்த பந்துக்காப்பாளர், விளையாட்டு வீரர் போன்றோரும் சிறப்பிக்கப்படுகின்றனர்..

இதனடிப்படையில் விளாவெட்டுவான் ராஜா விளையாட்டுக்கழகம் “விளாவூர் யுத்தம்” என்ற தொனியில் கழகத்தின் 47ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்திய உதைபந்தாட்ட போட்டியானது நேற்றும் (06) இன்றும் (07) சிறப்பாக நடைபெற்றது. வவுணதீவு,பட்டிப்பளை பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 27 அணிகள் பங்குபற்றி தங்களது திறமையினை வெளிக்காட்டின. கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் களமாடியதைப்போன்று இவ்வாண்டும் முனைக்காடு இராமகிருஸ்ணா அணியினரும் முதலைக்குடா விநாயகர் அணியினரும் இறுதிப்போட்டியில் களமாடி குறித்த நேரத்தினுள் எதுவித கோள்களும் போடாமையினால் தண்டனை உதைமூலம் 5:5, 5:4 என்ற வித்தியாசத்தில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டு கழகம் கிண்ணத்தை தனதாக்கியது. அத்துடன் முனைக்காடு இராமகிருஸ்ணா அணியின் அடுத்த அணி 4ம் இடத்தையும் பெற்றுக்கொள்ள 2ம் இடத்தினை முதலைக்குடா விநாயகர் அணியினரும், 3ம் இடத்தை காஞ்சிரங்குடா ஜெகன் அணியினரும் பெற்றுக்கொண்டனர்.

வசந்தம் TV, வசந்தம் FM ஊடக அனுசரணையில் நடாத்தப்பட்ட இவ் உதைபந்தாட்ட போட்டிக்கு அதிதிகளாக வவுணதீவு பிரதேச சபையின் செயலாளர் திருமதி புத்திசிகாமணி, வைத்திய கலாநிதி K.முரளிதரன், வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வசந்தம் TV, வசந்தம் FM ஊடகத்தின் சிரேஸ்ட ஆசிரியர் மற்றும் கிராமத்து பிரதிநிதிகள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் வெற்றிக்கிண்ணங்களையும் வழங்கி சிறந்த பந்துக்காப்பாராக தெரிவு செய்யப்பட்ட முதலைக்குடா விநாயகர் அணியின் வீரர் குபேஸ், சிறந்த விளையாட்டு வீரராக தெரிவு செய்யப்பட்ட முனைக்காடு இராமகிருஸ்ணா அணியின் வீரர் தேவா அவர்கக்கும் வழங்கி வைத்தனர்.