61வருடங்களின் பின் விழாக்கோலம் பூண்ட கொக்கட்டிச்சோலை

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அரிச்சந்திர புராணம் வடமோடிக் கூத்து சனிக்கிழமை(06) இரவு கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது..

கொக்கட்டிச்சோலை கிராமத்தில் 1956ம் ஆண்டு அரிசந்திர புராணம் வடமோடிக்கூத்து இறுதியாக அக்கிராம மக்களினால் அரங்கேற்றப்பட்;டுள்ளது. அதில் பாத்திரமேற்று நடித்த இரு கலைஞர்களே தற்போது உயிருடன் இருக்கின்றனர். அக்கூத்தினைத் தொடர்ந்து ஒரு சில கூத்துக்கள் இக்கிராமத்தில் ஆடப்பட்டுள்ளதாக அக்கிராம பெரியவர்கள் தெரிவித்தனர்.

நீண்ட காலத்திற்கு பிறகு, குறிப்பாக 61வருடங்களுக்கு பிற்பாடு, இந்த ஆண்டு கடந்த சனிக்கிழமையே மிகவும் சிறப்பாக, குறித்த மக்களினால் கூத்து அரங்கேற்றச் செய்யப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டனர்.
அரகேற்ற விழாவினை பார்வையிடுவதற்கு ஆயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வுக்கான ஆசியுரைகளை கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு மு.கு.சச்சிதானந்தக்குருக்கள், ஆலயக்குரு வ.சோதிலிங்கம் நிகழ்த்தினர்.

அரங்கேற்ற விழாவின் ஆரம்ப நிகழ்வுக்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நிறுவக பணிப்பாளர் சி.ஜெயசங்கர், கிழக்கு பல்கலைகழக கலை, கலாசார பீடாதிபதி மு.ரவி மற்றும் அரச உயரதிகாரிளும் வருகை தந்திருந்தனர்.

கலைக்கழகத்தின் தலைவர் பி.நீதிதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கூத்துக்கலைஞர்கள் அனைவரும் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் 1956ம் ஆண்டு அரிச்சந்திரபுராண கூத்தில் பாத்திரமேற்று நடித்து, தற்போது உயிருடன் இருக்கின்ற இரு கலைஞர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.