மே தினத்திற்குப் பின்னரான அரசியல் சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா? Nillanthan

காலிமுகத்திடலில் மே தினத்தன்று சிங்கள, பௌத்த கடும்போக்குவாதிகள் தமது புஜபல பராக்கிரமத்தை நிரூபித்த அதே நாளில் அம்பாறையில் கூட்டமைப்பின் தலைவர் தனது மே தின உரையில் ஒரு சாத்திரக்காரரைப் போல உரையாற்றியிருக்கிறார். .இன்னும் இரண்டு வாரங்களில் ஒரு நல்ல செய்தி வரும் என்று அவர் கூறியிருக்கிறார். தமிழ் மக்களுக்குரிய அரசியற்; தீர்வுத்திட்டம் தொடர்பில் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அரசாங்கத்திடமிருந்து நல்லதோர் முடிவினை எதிர்பார்த்திருப்பதாக சம்பந்தர் தனது மேதினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் ஏன் அப்படிச் சொன்னார்?

மே தினத்திற்கு அடுத்தடுத்த நாள் அதாவது 3ம் திகதி யாப்புருவாக்கத்திற்கான வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை இறுதியாக்கப்படும் என்று ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த அறிக்கை ஏற்கெனவே பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் கையளிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு அது கடந்த புதன்கிழமை இறுதியாக்கப்பட்டிருந்திருந்தால் சம்பந்தர் எதிர்பார்த்தது போல இனப்பிரச்சினைக்கான தீர்வின் ஏதோ ஒரு முனை வெளிப்பட்டிருந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. கடந்த டிசம்பர் மாதம் பத்தாம் திகதி வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. ஏறக்குறைய ஐந்து மாதங்கள் பிற்போடப்பட்ட பின் கடந்த புதன்கிழமை அது இறுதியாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில் புதன்கிழமை ஐம்பத்தேழாவது தடவையாக வழிநடத்தற்குழு கூடியது. இடைக்கால அறிக்கை தொடர்பில் வரும் 23ம் திகதி கட்சிகள் தமது முடிவுகளைத் தெரிவிப்பதாகவும் அதிலிருந்து நான்கு நாட்களுக்கு ஐந்து அமர்வுகளை நடத்தி இடைக்கால அறிக்கையை இறுதி செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்திலிருந்து பிற்போடப்பட்டு வரும் இடைக்கால அறிக்கையின் இறுதி வடிவமானது இனிமேலும் குறித்தொதுக்கப்பட்ட நாளில் வெளிவருமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால் நிச்சயமாக சம்பந்தர் சொன்ன இரண்டு வாரகாலப் பகுதிக்குள் அது நடக்கப்போவதில்லை. அது மட்டுமல்ல மே தினக் கூட்டங்களுக்குப் பின்னரான அரசியற்ச் சூழலை கருதிக் கூறின் நிச்சயமின்மைகளே அதிகம் தெரிகின்றன. இது பற்றி சம்பந்தரும் பிரஸ்தாபித்திருக்கிறார். மே தினக் கூட்டங்களின் பின் அரசாங்கம் யாப்புருவாக்க விடயத்தில் பின்வாங்கும் ஆபத்து இருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மேதினக் கூட்டங்களை வைத்துப் பார்த்தால் மகிந்த தொடர்ந்தும் பலமாகவுள்ளார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. மகிந்தவின் கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் எல்லாருமே அவருக்கு வாக்களிக்கப் போவதில்லைதான். அவர்கள் மத்தியில் காசுக்காகவும், குடிக்காகவும், வேறு சலுகைகளுக்காகவும் வந்தவர்களும் உண்டு. ஆனாலும் அதில் கலந்து கொண்ட எல்லாரையுமே அப்படிக் கூறிவிட முடியாது என்பதனை மகிந்தவின் எதிரிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள். கடந்த ஆண்டு நுகேகொடைவிலும் மகிந்த ஒரு மக்கள் எழுச்சியை நிகழ்த்திக் காட்டினார். அதன்பின் நிகழ்ந்த கூட்டுறவுச்சபைத் தேர்தல்களிலும் அவர் வெற்றியைப் பெற்றுக் காட்டினார். இப்பொழுது மே தினக் கூட்டத்திலும் தனது பலத்தை எண்பித்திருக்கிறார். இது அரசாங்கத்திற்கும் அதிர்ச்சிதான். மேற்கு நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் அதிர்ச்சிதான். இது யாப்புருவாக்க நடவடிக்கைகளை பாதிக்கும். உள்;ராட்சிமன்றத் தேர்தல்களை நடாத்துவது தொடர்பான அரசாங்கத்தின் முடிவுகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும்.

ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கத்திற்கு ஜி.பி.எஸ் பிளஸ் சலுகையை வழங்கி அதன் மூலம் அரசாங்கத்தின் அந்தஸ்தை உலக அரங்கில் உயர்த்த முற்பட்டது. யாப்புருவாக்க செயற்பாடுகளில் அரசாங்கத்தை மேலும் பலப்படுத்த ஜி.பி.எஸ்.பிளஸ் சலுகை உதவக்கூடும் என்ற ஓர் எதிர்பார்ப்பு இருந்திருக்கலாம். ஆனால் மேதினக் கூட்டம் உள்நாட்டில் அரசாங்கத்தை பலவீனப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே மகிந்தவைக் காரணம் காட்டி இனப்பிரச்சினைக்கான தீர்வின் அடர்த்தியைக் குறைத்துக்கொண்டு வந்த அரசாங்கம் இனிமேல் யாப்புருவாக்க முயற்சிகளில் எவ்வாறு நடந்து கொள்ளும்? புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்த பொழுது கூட்டமைப்பின் பரிந்துரைகளை அரசாங்கம் புறக்கணித்திருப்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.

இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பது என்பது இனவாதத்தை எப்படிக் கையாள்வது என்பதுதான். ஆயுதப் போராட்டமானது இனவாதத்தை போரின் மூலம் தோற்கடிக்க முற்பட்டது. ஆனால் சம்பந்தர் அப்படிச் சிந்திக்கவில்லை. இனவாதத்தை பகை நிலைக்குத் தள்ளாமல் அதற்குள் பிளவை ஏற்படுத்தி அதிலிருக்கக்கூடிய மென்போக்குவாதிகளோடு சேர்ந்து கடும்போக்கு வாதிகளை பலவீனப்படுத்துவதே அவருடைய உத்தியாகக் காணப்படுகிறது. கடந்த எட்டாண்டுகளாக அவர் தமிழ் அரசியலை செலுத்திவரும் பாதை அதுதான். இது சம்பந்தரின் சிந்தனை மட்டுமல்ல. மேற்கு நாடுகளும் அப்படித்தான் சிந்திக்கின்றன. இனவாதத்தை பகை நிலைக்குத் தள்ளினால் அது மறுபடியும் எழுச்சி பெற்று சீனாவை தன் மடியில் தூக்கி வைத்துவிடும் என்று மேற்கு நாடுகள் சிந்திக்கின்றன.  எனவே இனவாதப் போக்குக் குறைந்த சிங்களத் தரப்பையும், தமிழ், முஸ்லீம், மலையகத் தரப்பையும் இணைத்து கடும்போக்கு இனவாதிகளை சிறுபான்மையினராக்குவது என்ற ஒரு திட்டத்தை முன்வைத்தே மேற்கு நாடுகளும் செயற்படுகின்றன.

ஆனால் இந்த உத்தியில் ஓர் அடிப்படைப் பலவீனம் உண்டு. இலங்கைத் தீவில் பேரினவாதம் எனப்படுவது பல நூற்றாண்டுகளாக நன்கு நிறுவனமயப்பட்ட ஒன்று. ஆட்சிப் பொறுப்புக்கு வரும் எவரும் அதன் கைதிகள்தான். இந்த கட்டமைப்பில் மகிந்த ஒரு முனையில் நிற்கிறார் என்றால் மைத்திரி மற்றொரு முனையில் நிற்கிறார். மகிந்த கடும் மீசையோடு விறைப்பாக விட்டுக்கொடுப்பின்றி காட்சி தருகிறார். மைத்திரியோ ஒரு சாதுவாக அப்பிராணியாகத் தோன்றுகிறார். ரணில் பெருமளவிற்கு மேற்கு மயப்பட்ட ஆங்கிலம் பேசும் ஒரு மேட்டுக்குடியினராகத் தோன்றுகிறார். ஆனால் யார் எப்படித் தோன்றினாலும், எதைக் கதைத்தாலும் நன்கு நிறுவனமயப்பட்டிருக்கும் ஒரு கட்டமைப்பின் பிரதிநிதிகளாகவே செயற்பட முடியும். கடந்த ஈராண்டுகால ரணில் – மைத்திரி ஆட்சியே இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். பாதுகாப்புக்கொள்கை, காணிக்கொள்கை, யுத்த வெற்றிகளைப் பாதுகாப்பது, வெற்றி வீரர்களைப் பாதுகாப்பது, மகா சங்கத்தினரைக் கையாள்வது போன்ற அடிப்படையான விவகாரங்களில் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் அடிப்படையான மாற்றங்கள் எவையும் நிகழவில்லை. அப்படி நிகழவும் முடியாது. ஒரு மைத்திரி நல்லவர் போலத் தோன்றுவதனால் அவரை நம்பி ஓரு நல்ல செய்தி வரும் என்று காத்திருக்க முடியாது. அப்படி நம்புவது என்பது இலங்கைத்தீவின் பேரினவாதத்தை பிழையாக விளங்கிக் கொள்வதுதான். அது நன்கு நிறுவனமயப்பட்ட ஒரு கட்டமைப்பு. தனிப்பட்ட தலைவர்களால் சீர்திருத்தங்களைச் செய்ய முடியும். ஆனால் அடிப்படையான மாற்றங்களைச் செய்ய முடியாது. பல நூற்றாண்டுகளாக நிறுவனமயப்பட்டிருக்கும் ஒரு கட்டமைப்பை மாற்றுவதென்றால் அதற்கு நிறுவனமயப்பட்ட ஓர் உழைப்புத் தேவை.

மைத்திரியையும், ரணிலையும் இலங்கைத்தீவின் அரசுக்கட்டமைப்புக்கு புறத்தியானவர்களாக பார்ப்பது என்பதே ஓர் அடிப்படைத் தவறு. அவர்கள் இருவரும் இனவாத மயப்பட்ட ஒரு கட்டமைப்புக்குள் நின்றுகொண்டு அதற்கு வெளியே நிற்பவர்களைப் போல ஒரு பொய்த்தோற்றத்தை காட்டுகிறார்கள். இதை மைத்திரியும், ரணிலும்தான் புதிதாகச் செய்கின்றார்கள் என்பதல்ல. இலங்கைத்தீவின் நவீன அரசியலில் இதற்கு முன்னரும் சில தலைவர்கள் இப்படித் தோன்றியிருக்கிறார்கள். எந்த இனவாதக் கட்டமைப்பின் கைதிகளாக அவர்கள் காணப்பட்டர்களோ அதே கட்டமைப்பிற்கு புறத்தியாகவும் தங்களைக் காட்டிக்கெண்டார்கள். சந்திரிக்கா அதைத்தான் செய்தார். ஜெயவர்த்தனாவும் அதை ஓரளவிற்குச் செய்தார். வெளித்தோற்றத்திற்கு ஜெயவர்த்தன தன்னை ஒரு தர்மிஸ்ரராக அறிவித்தார். அதே சமயம் அவரது கட்சிக்குள் காணப்பட்ட சிறில் மத்யூ போன்றவர்கள் மூர்க்கத்தனமான இனவாதிகளாக அடையாளம் காணப்பட்டார்கள். இதில் சிறில்மற்யூ வேறு ஜெ.ஆர் வேறு என்பதல்ல. இருவருமே ஒன்றுதான். இனவாதம் ஒரு வசதிக்காக அல்லது வெளியுலகத்திற்கு காட்டுவதற்காக அல்லது தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக தன்னை இரண்டாகக் காட்டிக் கொள்ளும். ஒரு தீர்வு என்று வரும்போது தான் தர விரும்பாத ஒரு தீர்வை மற்றத் தரப்பு அதாவது கடும்போக்காளர்கள்  எதிர்ப்பதாகக் காரணம் காட்டியே நிராகரித்து விடும் “என்ன செய்வது அவர்கள் விடுகிறார்கள் இல்லை” என்று இயலாமையுடன் கையை விரிக்கும். காணி விடுவிப்பு தொடர்பில் அண்மையில் மைத்திரியும் படைத்தரப்பும் மாறி மாறிப் பந்தைக் கடத்தியதை இங்கு சுட்டிக்காட வேண்டும்

இப்படிப் பார்த்தால் ஒரு கட்டமைப்பின் கைதிகளாhகக் காணப்படும் எல்லாச் சிங்களத் தலைவர்களும் அந்த கட்டமைப்பை உடைக்க முடியாதவர்கள் தான். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்ட சிரித்திரன் சஞ்சிகையின் ஆசிரியரான சுந்தர் ஒரு உதாரணத்தைக் கூறுவார். “நீருக்குள் மிதக்கும் பனிக்கட்டிகள்” என்று. இது ரணிலுக்கும், மைத்திரிக்கும் பொருந்தும்.

இந்த இடத்தில் வேறொரு உதாரணத்தையும் சுட்டிக்காட்டலாம். கடந்த ஆண்டு யாழ்பாணத்திற்கு வந்திருந்த குவாட்றிக் இஸ்மைல் என்ற ஒரு முன்னாள் அரசியல் பத்தி எழுத்தாளர் – இ;ப்பொழுது அமெரிக்காவில் வசிக்கிறார் – ஒரு தனிப்பட்ட சந்திப்பின் போது என்னிடம் சொன்னார். “மைத்திரி நல்லவராகத் தோன்றுகிறார். இதற்கு முன்பிருந்த தலைவர்களோடு ஒப்பிடுகையில் அவர் வித்தியாசமானவர்” என்று. நான் சொன்னேன் “இருக்கலாம். ஆனால் அவரும் ஒரு கட்டமைப்பின் கைதிதான்” என்று. 1980களில் சண்டேரைம்ஸ் பத்திரிகையில் பிரபல்யமாக எழுதிக்கொண்டிருந்தவர் குவாட்றிக் இஸ்மைல். இவர் அமெரிக்காவில் குடியேறிய பின் 1999ல் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு சந்திப்பில் அவரும் கலந்து கொண்டார். அச்சந்திப்பில் கலாநிதி நீலன் திருச்செல்வம் உரையாற்றினார். அந்த உரையின் போது அவர் ஒரு விடயத்தை சுட்டிக் காட்டினாராம். “சிங்களத் தலைவர்கள் தனிப்பட்ட உரையாடல்களின் போது நல்லவர்களாகவும், தாராளத் தன்மை மிக்கவர்களாகவும் காணப்படுவார்கள். ஆனால் பொது அரங்கில்; செயற்படும் பொழுதோ தலைகீழாக மோசமான இனவாதிகளாகத் தோன்றுவார்கள்” என்று.

1999ல் கொல்லப்படுவதற்கு சிறிது காலத்திற்கு முன் கலாநிதி நீலன் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஓர் உண்மை அது. ஏறக்குறைய 20 ஆண்டுகளின் பின் அதாவது 2019 இல் ஐ.நா அரசாங்கத்திற்கு வழங்கிய கால அவகாசம் முடியும் பொழுது; நீலன் கண்டுபிடித்த அதே உண்மையை கூட்டமைப்பின் தலைவரும் கண்டுபிடிக்கப் போகிறாரா? அல்லது இன்னும் இரண்டு கிழமைகளில் கண்டுபிடிக்கப் போகிறாரா?

ஆனால் அமைச்சர் மனோகணேசன் கூறுகிறார் கூட்டமைப்பின் தலைமை தனது மக்களுக்கு உண்மைகளைச் சொல்வதில்லை என்ற தொனிப்பட. அண்மையில் லண்டனில் கூட்டமைப்பின் லண்டன் கிளையால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே மனோகணேசன் இப்படிக் கூறியிருக்கிறார். மிகவும் அடர்த்தி குறைந்த ஒரு தீர்வே தமிழ் மக்களுக்கு கிடைக்கவிருக்கிறது என்ற தொனிப்பட அவர் மேலும் கூறியுள்ளார். ஏறக்குறைய அவர் சொல்வதைத்தான் மற்றொரு அரசாங்கப் பிரமுகரான கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரட்ணவும் கூறியுள்ளார். அரசாங்கத்தின் பிரதானிகளே இப்படி வெளிப்படையாக பேசிக்கொண்டிருக்கும் பொழுது தமிழ்த்தலைவர்கள் ஏன் சாத்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?

www.nillanthan.net