மாற்றுத்)திறனாளிகளுடன் ஒரு நாள் P.SEEVAGAN

திறன்குறைவு எங்களுக்குத்தான் என்பதை உணரவைத்த ஒரு நாள் அது. கடந்த மாதம் தமிழ் புது வருடத்துக்கு மறுநாள். மட்டக்களப்பில் ‘’அரங்கம் நிறுவனம்’’ ஊடகக் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. கலந்துகொண்டவர்கள் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் உறுப்பினர்கள்.
நாங்கள் கற்றுக்கொடுத்ததை விட நாம் கற்றுக்கொண்டது அங்கு அதிகம்…

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் திறனை வளர்ப்பதில் பங்களிப்பதற்கான அரங்கம் அமைப்பின் ஒரு முயற்சி இது.

நகருக்குள்ளே கருத்தரங்கு நடந்தாலும் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும் மாவட்டத்தின் கிராமப்பகுதிகளை சேர்ந்தவர்கள். 27 பேர் கலந்துகொண்டனர். அதில் பத்துக்கும் அதிகமானோர் பெண்கள். அம்பிளாந்துறை, கொக்கட்டிச்சோலை, ஆரையம்பதி, அரசடித்தீவு, பண்டாரியாவெளி, பெரியபோரதீவு, வாழைச்சேனை, கிரான், பளுகாமம், செங்கலடி,முனைத்தீவு என மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து இவர்கள் வந்திருந்தனர்.

புதுவருட தினத்துக்கு மறுதினம் சனிக்கிழமை என்பதால், போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்ததால் சிலரால் சமூகமளிக்க முடியாமல் போய்விட்டது.

மாவட்ட சமூக சேவைகள் அதிகாரி அருள்மொழி சாரங்கபாணி கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.

சிறப்பு அதிதிகளாக மாவட்ட வர்த்தக சங்கத்தை சேர்ந்த முக்கியத்தர்களான எம். செல்வராஜா மற்றும் எஸ். ரஞ்சிதமூர்த்தி மற்றும் மொபிட்டல் நிறுவன பிராந்திய அதிகாரி தங்கையா தர்மேந்திரன்ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். உண்மையில் இவர்களுக்கு தமது ஊரில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுடனான பரீச்சயத்தை அவர்களின் உரைகள் பிரதிபலித்தன. தம்மால் முடிந்தவரை அவர்களை புரிந்து அவர்களுக்கு இவர்கள் உதவியும் வருவது அவர்களின் உரையில் புரிந்தது. புலம்பெயர்ந்துவாழும் வணிகர்கள் இவர்களின் வழியை பின்பற்ற முயற்சிக்க வேண்டும்.

வளவாளர்களில் சிவராசா கருணாகரன் இறுதிப்போரை நேரடியாக பார்த்தவர் என்பதால், போரினால் காயமடைந்தவர்களை நன்கு புரிந்து வைத்திருந்தார். கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் போராளிகள்.

தினகரன் ஆசிரியர் குணராசா, பயனாளிகளின்அ திறனையும் உறுதியையும் கண்டு கண்கலங்கி நின்றார்.

தமயந்தி தனது கமெராவின் ஒற்றைக் கண்ணின் ஊடாக நெற்றிக் கண்போல் பார்ப்பது எப்படி என்று நன்றாகவே விளக்கினார். ஆய்வுகளை எப்படி செய்வது என்று கிழக்குப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சிவரட்ணம் மற்றும் ஆய்வாளர் விஜய் எட்வின் ஆகியோர் விளக்கினர். இது கலந்துகொண்டவர்களுக்கு கொஞ்சம் புதிய துறை. பேராசிரியர். யோகராசா அவர்கள் மொழி பற்றிய விளக்கங்களை தந்தார்.

விரிவுரைகளை முன்னாள் கல்விப்பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி திறனாய்வு செய்தார்.

உண்மையில் ஊடகத்துறை சார்ந்த இந்த விரிவுரைகளுக்கு அப்பால் இன்னுமொரு கலந்துரையாடல் மாற்றுத்திறனாளிகளை நன்கு கவர்ந்திருந்தது. மாற்றுத்திறனாளியான தமது மகனை இலங்கையிலும், லண்டனிலும், வித்தியாசமான சூழல்களில் வளர்க்கப் போராடிய திருப்பதி தம்பதிகளின் கலந்துரையாடல் மாற்றுத்திறனாளிகளின் கண்களை கலங்கச் செய்தது. ஆனால், அது அவர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது.
அவர்கள் எங்களிடம் இருந்து ஊடகத்தை புரிந்துகொண்டது ஒரு புறம் இருந்தாலும், நாம் அவர்களிடம் கற்றுக்கொண்டது அங்கு நிறைய. அதில் புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் அங்கு நிறைய தேவைப்படுகின்றன என்பதும் ஒன்று.