பட்டிருப்பு வலயம் அன்றும் இன்றும் மனம் திறந்த வலயக்கல்விப்பணிப்பாளர்.

நான் வலயக் கல்விப் பணிப்பாளராக பதவியேற்கும் போது பலதரப்பட்ட சவால்களுக்கு மத்தியில்தான் நான் பொறுப்பேற்றேன். இதனை வெற்றி கொள்வதற்கு, எட்டு வருட திட்டத்தினை தயாரித்து அதன்பாற் எமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.   பொறுகபபேற்கும் போது 40 வீதமாக இருந்த க.பொ.த.சாதரணதர பெறுபேற்றை 69 வீதமாக உயர்த்தியுள்ளோம்.என பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்..

மட்டக்களப்பு சமூக விழிப்புணர்வு மன்றம் நடாத்திய பட்டிருப்பு கல்வி வலயத்தில் 2016 க.பொ.த(சா.த)  9ஏ, வெல்லாவெளி கோட்டத்தில் 4ஏ க்கு மேல் சித்தியைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய கலைக்கூட மண்டபத்தில் அவ் அமைப்பின் தலைவர் பொன்.மனோகரன்  தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

எமது பட்டிருப்பு கல்வி வலயத்தின் போரதீவுப் பற்று பிரதேசம் படுவான்கரை பிரதேசமாக இருந்தாலும் கூட எமது இருப்பின் முதுகெலும்பாக காணப்படும் பிரதேசம் என்பதில் மிகையாகாது. இப்பிரதேசம் பல்வேறு அனர்த்தங்களுக்கு உள்ளாகியிருந்தாலும் கூட தற்பொழுது கல்வியினூடாக முன்னேறி வருவதற்கு எமது சமூகத்தின் ஒத்துழைப்புத்தான் காரணம் என்பதனை நாங்கள் மறந்துவிட முடியாது.

ஒரு சமூகம் வளர்ச்சியடைய வேண்டுமாக இருந்தால் கல்வியின் ஊடாகத்தான் வளர்ச்சியடைய முடியும் என்பது அனைவரதும் எண்ணமாகும். அந்தவகையில் ஒரு சமூகத்தின் ஒத்துழைப்பும் அதன் ஊக்கப்படுத்தலும் இருக்கின்றபோதே,  கல்விச் சமூகத்தினால் கல்வி செயற்பாட்டை முன்னோக்கி கொண்டு  செல்லக்கூடியதாக இருக்கும். அந்த வகையில் சமூக  விழிப்புணர்வு மன்றமானது மாணவர்களை கௌரவித்தமையையிட்டு அவர்களுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 உண்மையில் நான் பட்டிருப்பு கல்வி வலயத்தின் வலயக்கல்வி பணிப்பாளராக கடமையேற்கின்றபோது, க.பொ.த.சாதாரண தரத்தின் பெறுபேறு 40 வீதமாக இருந்தது. அது கடந்த வருடம் 62 வீதமாகவும்,  இவ்வருடம் 69 வீதமாகவும் உயர்ந்திருக்கின்றது. அதேபோல் ஆசிரியர்களை பார்க்கின்றபோது நான் கடமையேற்ற போது கிட்டத்தட்ட 79 ஆங்கில ஆசிரியர்கள் பற்றாக்குறையும், 59 விஞ்ஞான ஆசிரியர்கள் பற்றாக்குறையும், 52 கணித ஆசிரியர்கள் பற்றாக்குறையும், அதேபோல் ஏனைய ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருந்தாலும் கூட கலைப்பட்டதாரிகளை கூடுதலாக கொண்டு நான் கடமையேற்றேன்.

 அதுமாத்திரமின்றி 2739 மாணவர்கள் எழுத வாசிக்க தெரியாதவர்களாகவும் இருந்தார்கள்  எனவே இவ்வாறான நிலையில்தான் நான் வலயத்தை பெறுப்பேற்றுக் கொண்டேன்.

இந் நிலையில் எமது அதிபர் ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் அனைவரும் எங்களுக்கான எட்டு வருட திட்டத்தினை தயாரித்து அதன்பாற் எமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். அத்தவகையில் அதிபர்கள்,ஆசிரியர்கள் சமூகத்தினர் என அனைவரும் எமது  முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி பங்காற்றியிருந்தனர்.

கல்வி முன்னேற்றம் என்பது நீண்டகால கருமத்தொடர் ஒரேநாளில் இதன் நோக்கத்தினை எட்டிவிட முடியாது. அதேபோல் இதனைக் கூட்டு கருமத்தொடராகத்தான் மேற்கொள்ள முடியும். கல்விப்புல சமூகத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களும் கல்வியில் மாற்றத்தினை ஏற்படுத்தும் என்பது யாவரும் அறிந்த விடயம். எனவே பல்வேறான மாற்றங்களில் பல்வேறான ஒத்துழைப்புக்கள், அர்ப்பனிப்புக்கள் எமக்கு துணைபுரிகின்றன.

அந்த வகையில் இம்முறை கணிதபாடத்தில் 10 வீதமான சித்தி உயர்வினையும், அதே போன்று விஞ்ஞான பாடத்தில் 13 வீதமான சித்தி உயர்வினையும், வரலாற்றுப் பாடத்தில் 14 வீதமான சித்தி உயர்வினையும் பெற்றிருக்கின்றோம். மொத்தமாக பார்க்கின்றபோது கடந்த வருடம் 62 வீதமாக இருந்த சித்தி வீதமானது இவ்வருடம் 69 வீதமாக உயர்வடைந்துள்ளது.

உயர்தரத்தினைப் பொறுத்தளவில் புலமைப்பரிசில் பரீட்சை சித்தியடைந்தவர்களும், சாதாரண தரத்தில் உயர்பெறுபேறுகளைப் பெற்றவர்களும், வேறு நகர்புறங்களை நாடி வேறு கல்வி வலயங்களுக்கு சென்று கல்வி கற்றுவருகின்ற நிலை காணப்படுகின்றது. இருந்தபோதும் எஞ்சிய மாணவர்களில்  70 வீதமான மாணவர்கள் உயர்தரத்தில் சித்தி பெற்று பல்கலைக்கழக அனுமதியைப் பெற்று செல்வது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வர்த்தக பிரிவில் தொடர்ச்சியாக மூன்று தடவைகள்  நாங்கள் கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தை பெற்றுவருகின்றோம். அது மாத்திரமல்ல வர்த்தக பிரிவின் சித்தி வீதம் 98 வீதமாக இருக்கின்றது. அதேபோல் சமூக விஞ்ஞான போட்டியை எடுத்துக் கொண்டால் கடந்த மூன்று வருடங்களாக அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தினை பெற்று வருகின்றோம்.

இவ்வாறு தொடர்சாதனைகளை எமது மாணவர்கள் நிலைநாட்டி வருகின்றனர்.

கடந்த வருடம் 7பேர் 9ஏ  சித்தியை பெற்றிருந்தபோதும் இம்முறை 14 மாணவர்கள் 9ஏ சித்தியினை பெற்றுள்ளனர்.

அதேபோன்று 8ஏ வீ சித்தியினை 39 மாணவர்கள் பெற்றுள்ளனர். கடந்த கணிதபாட பேறுபேற்றின்படி 250 மாணவர்கள் கணிதத்தில் ஏ,வீ சித்திகளைப் பெற்றுள்ளனர். ஆனால் கணித, விஞ்ஞான பிரிவில் கற்பதற்கு 20 மாணவர்கள் கூட சேர்வது மிகவும் கஷ்ரமான விடயமாக இருக்கும்.

இதில் கூடுதலான மாணவர்கள் ஏனைய வலயங்களுக்கு செல்லும் அதேவேளை கூடுதலான மாணவர்கள் கலைப்பிரிவை  தேர்ந்தெடுகின்றனர். இது எங்களுக்கு மிகவும் பிரச்சினையான ஒரு விடயமாக இருக்கின்றது.

எமது வலயத்தில் இரண்டு பாடசாலைகளில் தொழிநுட்ப பிரிவினை ஆரம்பித்தும் கலைத்துறைக்கு செல்லும் மாணவர்களின் தொகை குறைவடையவில்லை மாணவர்கள் பாடத்தேர்வுகளில் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். எமக்கு இன்று பல புலம்பெயர் அமைப்புக்கள்  கணித,விஞ்ஞான பாடங்களுக்கு உதவி செய்கின்றனர்.

இவ்வாறு கிடைக்கப்பெறுகின்ற ஒத்துழைப்பினை வைத்து மாணவர்கள் தற்காலத்தின் சூழ்நிலைக்கேற்ப கணித,விஞ்ஞான, தொழிநுட்ப துறைகளில் கற்பதற்கு  முன்வரவேண்டும். இம்முறை பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் நாங்கள் கணித,விஞ்ஞான பிரிவினை ஆரம்பிப்பதற்கு எண்ணியுள்ளோம் இங்கும் மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம், இதற்காக விசேட போக்குவரத்தை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சை கோரியுள்ளோம். எனவே அன்பான மாணவர்களே இச் சந்தர்ப்பங்களை நீங்கள் சாதகமாக பயன்படுத்தி எதிர்கால தொழில் உலகுக்க முகங்கொடுக்க கூடியவர்களா நீங்கள் மாறவேண்டும்  என அவர் இதன்போது தெரிவித்தார்..