கொக்கட்டிச்சோலை, விடுதிக்கல் குப்பைமேடு துப்பரவு பணி மும்முரம்

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேசசபைக்குட்பட்ட கழிவுகளை கொட்டும், விடுதிக்கல் குப்பைமேட்டுப் பகுதியில் உள்ள, குப்பைகளை அகற்றி, இடத்தினை துப்பரவு செய்யும் வேலைகளை துரிதமாக மண்முனை தென்மேற்கு பிரதேச சபையினர் செய்து வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை மண்முனை தென்மேற்கு பிரதேசசபையினால் ஆரம்பிக்கப்பட்ட துப்பரவு செய்யும் பணிகள், இரண்டாவது நாளாகிய வெள்ளிக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டன. இயந்திரங்களின் உதவியுடனே குப்பை கொட்டும் காணிப்பகுதி துப்பரவு செய்யப்படுகின்றது.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட குப்பைகள் அனைத்தும், விடுதிக்கல் கிராமத்தில் கொட்டப்பட்டு வந்த, நிலையில் கடந்த திங்கட்கிழமை இக்குப்பை மேட்டில் தீயேற்றபட்டது. இதனை அடுத்து அங்குள்ள மக்கள் குப்பைகளை, விடுதிக்கல் கிராமத்தில் கொட்ட வேண்டாம் என ஆர்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, விடுதிக்கல் மக்களுக்கும் பிரதேச சபையின் செயலாளருக்குமிடையில், பட்டிப்பளை பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போது, தற்போது குப்பை கொட்டப்படும் இடத்தினை துப்பரவு செய்து, குப்பைகளை தரம்பிரிக்கும் இடமாக உபயோகப்படுத்துவதற்கு விடுதிக்கல் மக்கள் இணக்கம் தெரிவித்தனர்.

மக்களின் இணத்திற்கமைய குப்பை கொட்டப்பட்ட இடத்தினை துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரதேசத்தின் கழிவுகள் செவ்வாய்க்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரையும் சேகரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.