சுயாதீன ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தின் 59 வது ஆண்டு நிறைவையும், சித்திரைப் புத்தாண்டினையும் முன்னிட்டு அக்கிராமத்தில் அமைந்துள்ள அனைத்து உள்ளுர் மன்றங்கள், பொதுமக்களின் ஆதரவுடன் கலாசார விளையாட்டு விழா  அண்மையில் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாட்டத்திலிருந்து 10 வருட காலமாக சுயாதீன ஊடகவியலாளராக பணிபுரிந்துவரும் வடிவேல் சக்திவேல் அவர்களின் ஊடக சேவையினைப் பாராட்டி மேற்படி விளையாட்டுக் கழகத்தினால் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தனது பாடசாலைக் காலத்திலிருந்து மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த தினக்கதிர் பத்திரிகைகளுக்கு ஆக்கங்களை எழுதி வந்த வடிவேல் சக்திவேல் அவர்கள், பாடசாலைக் காலம் முடிந்ததும் கொக்கட்டிச்சோலையிலிருந்து வெளிவந்த ஈழநாதம் பத்திரிகையில் ஒப்பு நோக்குனராகப் பணிபுரிந்தார். பின்னர் இன்ர நீயூஸ் ஊடக அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்ட கிழக்கு ஊடக இல்லத்தில் பணிபுரிந்த அவர் தற்போது சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வருகின்றார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கையிலுள்ள ஐந்து ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடாத்திய விருது வழங்கல் நிகழ்வில் “சிறந்த மக்கள் சேவை ஊடக விருதினைப் பெற்ற அவர் 2013 ஆம் ஆண்டு களுமுந்தன்வெளி கலைக்கழகம் நடாத்திய விருது வழங்கில் நிகழ்வில் “சிறந்த பிரதேச ஊடகவியலாளர்” விருதினையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் யுத்தம் மற்றும் சமாதானங்கள் தொடர்பில் அறிக்கையிடும் அமைப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு நடாத்திய விருது வழங்கல் நிகழ்வில் “சிறந்த கட்டுரையாளருக்கான விருதைப்” பெற்றுக்கொண்டுள்ள நிலையில் களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகமும் அவரை  பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவித்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.