கொக்கட்டிச்சோலைப் பகுதியில் குப்பை சேகரிக்கப்படவில்லையென மக்கள் விசனம்

மண்முனை தென்மேற்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம்(04) குப்பைகள் சேகரிக்கப்படவில்லையென மக்கள் விசனம் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து குப்பைகள் சேகரிக்கப்படவில்லையெனவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்..

இது, தொடர்பில் பிரதேசசபை செயலாளரிடம் வினாவிய போது, பிரதேசசபையின் கழிவுகள் கொட்டப்படும், விடுதிக்கல் பகுதியில் குப்பைகளை கொட்ட வேண்டாமென கூறி அப்பகுதி மக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்பாட்டம் மேற்கொண்டனர். இதன்போது குப்பைகளை கொட்டுவதற்காக குப்பைகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரங்கள் இரண்டும் திருப்பி அனுப்பபட்டன. இதனைத்தொடர்ந்து குறித்த விடுதிக்கல் கிராம மக்களுக்கும், தமக்குமிடையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் கலந்துரையாடலொன்று புதன்கிழமை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

அக்கலந்துரையாடலுக்கு அமைய தற்போது குப்பை கொட்டப்படும் இடத்தினை துப்பரவு செய்து, குப்பை கொட்டப்படும் இடத்தினை சுற்றி பாதுகாப்புவேலி அமைக்கப்பட்டதன் பின்பு குப்பை கொட்டுவதற்கு இணக்கம் விடுதிக்கல் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மக்களின் இணக்கத்திற்கு அமைய குப்பை கொட்டப்படும் இடத்தில் வேலைகள் தற்போது, இடம்பெற்றுவருகின்றது. வேலைகள் நிறைவுபெற்றதும் வழமைபோன்று கழிவுகள் அகற்றும் வேலைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

தற்போது குப்பைகள் கொட்டுவதற்கு இடமின்மையால் குப்பைகளை சேகரிக்க முடியாதுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.