ஹிங்குறான பகுதியில் காரைதீவுபொலிஸ் கான்ஸ்டபிள் மர்மமான முறையில் மரணம்.

தனது கரும்புக்காணிக்கு தண்ணீர்விடச்சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மரணமாகியுள்ளார்.
 
இச்சம்பவம்  இன்று வியாழக்கிழமை அம்பாறையை அடுத்துள்ள ஹிங்குறான எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளது..

 
மரணமான பொலிஸ் கான்ஸ்டபிள்  காரைதீவைச்சேர்ந்த சின்னத்தம்பி சதாசிவம் (வயது 55) என்பவராவார். 03ஆண்பிள்ளைகளின் தந்தையாரான இவர் அம்பாறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவராவார். 
 
இவர் வரலாற்றுப்பிரசித்திபெற்ற சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலயத்தினதும் காரைதீவு ஸ்ரீ காளிஅம்பாள் ஆலயத்தினதும் பிரதம பூசகராகவும் பணியாற்றிவருகின்றார். பிரபலமான ஒரு பூசகராவார்.
 
இவரது மகன் ஒருவர் களுத்துறையில் பொலிசில் கடமையாற்றுகின்றார் என்பதும் குறிப்பிடதக்கது.
 
‘சிவம்’ என அழைக்கப்படும் இவர் சம்பவதினத்திற்கு முந்திய அதாவது புதன்கிழமை மாலை ஹிங்குறாணயிலுள்ள தனது கரும்புக்காணிக்கு தண்ணீர் விடுவதற்காகச் சென்றிருந்தார்.
 
மறுநாள் அதாவதுஇன்று   வியாழக்கிழமை காலை காணியின் வோக்கடிப்பகுதியில் அவர் இறந்துகிடக்கக்காணப்பட்டார்.காலையில் அங்கு சென்றவர்கள் இவரது சடலத்தைக்கண்டதும் உறவினர்களுக்குத் தெரியப்படுத்தினர். 
அதனையடுத்து பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்தனர்.உறவினர்களும் காரைதீவு மக்களும் பெருமளவில் அங்கு சென்றிருந்தனர். உறவினர்கள் சடலத்தை இனங்காட்டினர்.
 
எனினும் நீதிபதி விசாரணைக்காக பிற்பகல் வரும்வரை சடலம் அந்த இடத்திலேயே கிடந்தது. 
 
நீதிபதி விசாரணையின் பின்னர் சடலம் அம்பாறை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படுமென்று பொலிசார் தெரிவித்தனர். வைத்தியசாலை விசாரணைகள் முடிவடைந்தபிற்பாடு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
 
இவரது மரணம் எவ்வாறு சம்பவித்தது என்பது தொடர்பில் பிரேத பரிசோதனை மற்றும் பொலிஸ் விசாரணைகளின்பின்னர்தான் தெரிவிக்கமுடியும் என்று சொல்லப்படுகின்றது.