கல்குடா மதுசார தொழிற்சாலை மாவட்ட  விவசாய பொருளாதார அபிவிருத்திக்கு உதவும்– மட்டு.  மாவட்ட துறைசார் வல்லுநர்கள் மன்றம்

மட்டக்களப்பு கல்குடா மதுசார மதுசார உற்பத்தித் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வேளையில் குறித்த தொழிற்சாலை அமைக்கப்பட்டால் மாவட்ட மக்களின் மதுபான பாவனை அதிகரிக்கும் எனவும் இதனால் ஏற்கனவே வறுமையில் முதலிடம் வகிக்கும் மாவட்டத்தின் பொருளாதார அபிவிருத்தியானது இன்னும் அதலபாதாளத்திற்கு சென்று விடுவதுடன்; சமூக சீர்கேடுகளும் இதனால் அதிகரிக்குமென சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக அமைப்புகள் கூறிவருவதுடன் இவர்களால் இத்தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்ற இந்த நேரத்தில் பொதுமக்கள் ஒரு குழப்பமான மனநிலையில் உள்ளதால்இ குறித்த தொழிற்சாலை அமைக்கப்படுவதால் பொதுமக்களுக்கும் மாவட்ட அபிவிருத்திக்கும் ஏற்படக்கூடிய சாதக பாதக நிலைமைகளைப் பற்றி சரியான முறையில் தெளிவுபடுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
ஏன்இது அவசியம் என நினைக்கின்றோம் என்றால், இத்தொழிற்சாலை தொடர்பாக அறிவியல் ரீதியாக நாங்கள் இதை ஆராயவேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு.இதில் பல துறைகள் சம்பந்தப்பட்டு உள்ளதால் அந்தந்த துறை சார்பாக, அதாவது விவசாயத்துறை, நீரியல்வளத்துறை, சூழலியல்துறை, பொருளியல்துறை, சமூகவியல்துறை போன்ற பல்துறை வல்லுநர்களின் கருத்துக்களை உள்வாங்கி அலசி ஆராய்ந்த பிற்பாடேதான் நாங்கள் இந்த முடிவுக்கு வருகின்றோமே தவிர எழுந்தமானமான எந்தவிதமான கருத்துக்களும் இல்லை.
எங்களது பிரதான நோக்கமே மக்களுக்கு பயனுள்ள விதத்தில் தொழிற்துறைத் திட்டங்களை கண்காணித்து செயற்படுத்துகின்ற ஒரு பொறிமுறையினை வகுக்கவேண்டும். அதாவது ஒவ்வொரு தொழிற்துறையும் வரும்போதும் அதற்கு சாதகமும் இருக்கும் பாதகமும் இருக்கும். இந்த நேரத்தில் பாதகத்தினை மட்டும் கருத்தில் எடுத்துக்கொண்டு அந்த தொழிற்சாலையினை மறுதலிப்பதற்கு முயற்சித்தோமானால் எந்தவொரு தொழிற்சாலையையும் மட்டக்களப்பில் உருவாக்க முடியாது, இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரத்தினையும் உயர்த்த முடியாது.
இதனாலேயே நாங்கள் கடந்தகால அனுபவங்களை கருத்தில் கொண்டு எந்தவொரு திட்டத்தினையும் தொடங்கும் போதும் அதன் சாதக பாதக விடயங்களை ஆராய்ந்து மக்களுக்கு அதிகளவில் நன்மை பயக்கும் திட்டங்களை செயற்படுத்துவதை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்வது மன்றத்தின் நோக்கமாகும்.
கடந்தகாலத்தில் வாகரையில் அமைக்கப்பட இருந்த நீரியல்வள தொழில் மையம் உட்பட அநேக தொழிற்சாலைகள் மட்டக்களப்பில் தொடங்கப்படாமலேயே திரும்பிப்போய் உள்ளன. எனவேதான் இனி எந்தவொரு தொழிற்சாலை வருவதாக இருந்தாலும் அதை நாங்கள் ஆராய்ந்து சாதகங்கள் அதிகமாக இருக்குமாக இருந்தால் அதனை ஏற்றுக்கொண்டு அடுத்தது பாதகங்களை என்ன விதத்தில் குறைத்துக்கொள்ளலாம் என்ற பொறிமுறைகளையும் நாங்கள் அரசாங்கத்திற்கும் சம்பந்தப்பட்டோருக்கும் தெரிவித்து எங்களின் அறிவுரையை வழங்குவதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
இங்கு முக்கியமாக சொல்லப்படவேண்டிய விடயம் என்னவெனில் இந்த தலைப்பு, எவருமே கதைப்பதற்கு அச்சப்படுகின்ற ஒரு தலைப்பாக உள்ளது ஏனெனில் மது பாவனையை ஊக்குவிப்பதற்கான வெளித்தோற்றத்தில் கருதப்பட்டு சேறுபூசுகின்ற நடவடிக்கையில் அவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் என்பதற்காக, அனேகமான எமது அரசியல்வாதிகள் உட்பட்ட சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தொழிற்சாலை பற்றிய உண்மையான விடயம் என்னவென்று தெரிந்தும் மௌனமாக உள்ளனர். இது இத் தொழிற்றுறை தொடர்பான கருத்தாடல்களை மிகவும் சவாலுக்கு உட்படுத்தி உள்ளது.
மேலும் மிகவும் முக்கியமான விடயம் ஒன்றினை இந்தச் சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். அதாவது மட்டக்களப்பு துறைசார் வல்லுநர்கள் மன்றமானது இந்த மதுசார உற்பத்தி நிறுவனத்துடனோ அல்லது இக்கம்பனி சார்ந்துள்ள அரசியல் பிரமுகர்களிடமோ எந்தவிதமான நட்போ, உறவுமுறையோ, அல்லது பணக்கொடுக்கல் வாங்கல்களோ, எதுவிதமான தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. முழுக்க முழுக்க பொதுமக்களின் நன்மை கருதியேதான் நாங்கள் இந்த செயற்பாடுகளை மேற்கொள்கின்றோம் என்பதனை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இத்திட்டத்தில் மக்களுக்கு கிடைக்கக்கூடிய அனுகூலங்கள்
1. இலங்கையில் சட்டரீதியான ஏறத்தாள 22 மதுபான உற்பத்தி சாலைகள் மதுபானங்களை உற்பத்தி செய்கின்றன. இந்த மதுபான உற்பத்தி சாலைகளுக்கு முக்கிய மூலப்பொருளாக தேவைப்படும் மதுசாரத்தினை (எதனோல்) தற்போது வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கின்றோம். இம்மதுசாரத்தினை (எதனோல்) உற்பத்தி செய்வதற்கே இத்தொழிற்சாலை நிறுவப்படுகின்றது. எனவே இது ஒரு மதுபான உற்பத்தி சாலை அல்ல. இதன் மூலம் எதனோல் இறக்குமதிக்காக செலவாகும் 120 மில்லியன் டொலர் இலங்கைக்கு வருமானமாகக் கிடைக்கும். இதனால் தனிநபர் வருமானம் அதிகரித்து இலங்கையர் அனைவருக்கும் நன்மை கிடைக்கும். இதுதவிர இலங்கையில் முதன்முறையாக தானியங்களில் (அரிசி, சோளன்) இருந்து மதுசாரம் (எதனோல்) தயாரிக்கின்ற ஒரு தொழிற்சாலையாகவும் இது அமைய இருக்கின்றது. இந்தியா போன்ற அண்டைய நாடுகளிலும் இவ்வாறான தொழிற்சாலைகள் ஏராளமாக உண்டு.
2. மூலப்பொருளான தானியங்கள் (அரிசி, சோளன்) தொடர்ச்சியாக தேவையாக இருப்பதனால் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு தொடர்ச்சியான தேவைப்பாடும் உருவாகும். இதனால் பருவகாலத்தில் விலை குறைகின்றது என்ற நிலைப்பாட்டடில் இருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுகின்றனர். அத்துடன் விவசாயிகள் நேரடியாக இத்தொழிற்சாலைக்கு நெல்லை அல்லது சோளனை வழங்குவதால் ஒரு நியாயமான விலையில் வழங்கமுடியும் (அதற்காக விவசாயிகள் சம்மேளத்துடன் தொழிற்சாலை நிருவாகம் ஒரு உடன்படிக்கையும் மேற்கொள்ளலாம்), இடையில் இருந்து ஏழை விவசாயிகளை சுரண்டுகின்ற வியாபாரிகளிடமிருந்தும் (இனபேதமின்றி) விவசாயிகளைப் பாதுகாக்கலாம். அத்துடன் அதிகமான அளவு தானியங்கள் தேவைப்படுவதால் விவசாயிகள் அதிகளவில் உற்பத்தியை மேற்கொள்ளலாம். மேலும் தானியங்களின் தரம் (சேதமானவை)சம்பந்தப்பட்ட பிரச்சினையும் இல்லை.
3. நெல்லினை இத்தொழிற்சாலை கொள்வனவு செய்தாலும் அரிசியாக மாற்றிய பிற்பாடுதான் இந்தத் தொழிற்சாலைக்கு பயன்படுத்த முடியும் எனவே அதிகளவான அரிசி ஆலைகளுக்கும் இங்கு தொழில் கிடைக்கின்றது சிறியளவாக அரிசி உற்பத்தி செய்கின்ற மக்களும் இதில் தொடர்ச்சியாக நன்மை அடைவார்கள்.
4. சோளன் உற்பத்திக்கு தேவை இருப்பதனால் சேனைப் பயிர்ச்செய்கையாக பழங்காலம் தொட்டு செய்து வந்த தொழிற்றுறை மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகின்றது. நீர்ப்பயன்பாடு மிகக்குறைவாகவே தேவைப்படுகின்ற சோளப்பயிர்ச்செய்கையை பாரிய அளவில் விருத்தி செய்வதன் மூலம் அரிசிப்பாவனையை குறைத்துக்கொள்ள முடியும்.
5. விவசாயிகளுக்கு தேவையான மூலதனங்களை அரசாங்கத்தினூடாக வங்கிகளில் இருந்து குறைந்த வட்டிவீதத்தில் வழங்குவதற்கு தொழிற்சாலை நிருவாகம் ஏற்பாடு செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளது.
6. விவசாயத்துறைக்கு அத்திவாரமாகத் திகழும் நீர்ப்பாசனத்துறையானது இத் தொழிற்சாலையின் தொழிற்பாட்டினால் விருத்தி அடையும். பிரதேச நீர்ப்பாசனத்துறையை விருத்தி செய்யவும் விவசாயத்துறையை அபிவிருத்தி செய்யவும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொழிற்சாலை நிருவாகம் உறுதி வழங்கியுள்ளமை சாதகமான விடயமாகும்.
7. இத்தொழிற்சாலையின் செயற்பாட்டினால் சமூக பொருளாதார அபிவிருத்தியும் அப்பிரதேசத்தில் ஏற்படும். உதாரணமாக 300 மில்லியன் ரூபா செலவில் நீர் வழங்கல் திட்டம் கம்பனியினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது தனியாக தொழிற்சாலைக்கு மட்டுமன்றி அப்பிரதேச மக்களுக்குமான குடிநீர் திட்டமாகத்தான் உள்ளது. அத்துடன் அப்பிரதேச மக்களின் கல்வி, சுகாதாரம் , போக்குவரத்து,விளையாட்டு, மற்றும் உட்கட்டுமான வேலைத்திட்டங்களை கம்பனியானது தனது செலவில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதனைக் காணலாம். அத்துடன் அப்பிரதேச மக்களுக்காக ஓர மாதிரிக் கிராமத்தினையும் உருவாக்குவதற்கு கம்பனி உறுதியளித்துள்ளது.
8. வெறுமனே மதுபான உற்பத்திக்கு மாத்திரமல்லாது மதுசார எரிபொருள் உற்பத்தித் துறைக்கும், சுகாதாரத்துறைக்கும் , மற்றும்; வாசனைத்திரவியங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும் இத்தொழிற்சாலை மதுசாரத்தினை வழங்கக்கூடியதாக இருக்கும். குறிப்பாக மது அற்ற நாடாக இலங்கை உருவாக்கப்பட்டாலும் இத் தொழிற்சாலையின் ஊடாக பிரேசில் , அமெரிக்கா, சீனா போன்று மதுசார எரிபொருள் உற்பத்தி துறையை நாம் விருத்தி செய்ய முடியும்.
பாதகத்தன்மைகள்
1. தானியங்களை இத்தொழிற்சாலைக்கு பயன்படுத்துவதால் உணவுத்தட்டுப்பாடு ஏற்படலாம். இது தனியாக மட்டக்களப்பிற்கு மட்டுமோ அல்லது இலங்கைக்கு மட்டுமோ தனியாக உள்ள ஒரு பிரச்சினை அல்ல முழு உலகத்திற்குமே உள்ள ஒரு பிரச்சினை. சோளப்பயிர்ச்செய்கையை விருத்தி செய்து மூலப்பொருளுக்கான அரிசியின் பாவனையை குறைப்பதன் மூலம் நாடளாவிய ரீதியில் இப்பிரச்சினையை குறைத்துக்கொள்ள முடியும்.
2. மூலப்பொருட்களுக்கான குறைநிரப்பாக தானியங்களின் இறக்குமதி அதிகரிக்கலாம். இது உண்மையில் நாடளாவிய பிரச்சினையாகும். உயர் தொழிநுட்பம் மற்றும் நிலையான பாசன வசதி ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் விவசாயத்துறையை அபிவிருத்தி செய்தல் இதற்குரிய நீண்டகால தீர்வாகும். மேலும் அரிசி இறக்குமதி செய்யப்பட்டாலும், அதன் விலையை எந்தவொரு அரசும் கட்டுப்பாட்டு விலையிலேயே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைத்திருப்பது யதார்த்தமான விடயம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
1. கரியமில வாயுவின் தாக்கத்தினைக் குறைப்பதற்கு இருபதாயிரம் மரங்களை தொழிற்சாலையின் சூழலில் நடுவதற்கு கம்பனி உறுதியளித்துள்ளமை ஆறுதல் அளிக்கின்ற விடயம்.
2. வெளியாகின்ற கரியமில வாயுவினை தனியாக பிரித்தெடுத்து கொகோகோலா போன்ற மென்பான கம்பனிகளுக்கு விற்பனை செய்யக்கூடிய இன்னுமொரு தொழிற்றுறையினையும் உருவாக்கமுடியும்.
3. வெளிவரும் இடைநிலைப் பொருட்ளைக் கொண்டு கால்நடைத் தீவனம் தயாரிக்கலாம். இதனால் பிரதேசத்தின் கால்நடை வளர்ப்பு தொழிற்றுறையையும்அதிகரிக்க முடியும்.
4. திட்ட வரைபின் பிரகாரம் கழிவு நீர் முகாமைத்துவத் திட்டம் செயற்படுத்தப்பட இருக்கின்றது. உயர் தொழிநுட்ப எந்திரங்களைப் பயன்படுத்தி கழிவு நீரை மீள்சுழற்சி செய்வதன் மூலம், மதுசார உற்பத்திக்கு மீளப்பயன்படுத்த கம்பனி எதிர்பார்த்துள்ளது. இதன் மூலம் தேசிய நீர்வழங்கல் வடிகால் சபையின் ஊடாக மதுசார உற்பத்திக்கு பெறப்படும் நீரின் அளவு வெகுவாக குறைக்கப்படலாம்.
5. நொதித்தலால் ஏற்படக்கூடிய மணம் வடிசாலைகள் போன்று மணமற்றது என தொழிற்சாலை நிர்வாகம் உறுதிப்படுத்துகின்றது.
தொழில் வாய்ப்புகள்
கட்டுமான பணியில் கம்பனியின் உறுதிமொழியின் பிரகாரம் 800 வேலைவாய்ப்புகள் தேவையாக உள்ளன. இதில் 200 தொழிநுட்ப பிரிவிலும் மிகுதியாக இருக்கின்ற 600 வேலைவாய்ப்புகளும் பயிற்றப்படாத தொழிலாளி தரத்திலானவை. இவை அனைத்தையும் அப்பிரதேச மக்களுக்கு வழங்குவதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றனர். அத்துடன் 125 நேரடியான தொழில்வாய்ப்புக்களில் 40 தொழிநுட்ப பிரிவு தவிர்ந்த எஞ்சிய 85 தொழில் வாய்ப்புக்களையும் அப்பிரதேச மக்களுக்கு வழங்குவதற்கு கம்பனி தயாராக இருக்கின்றது. அத்துடன் மறைமுகமான தொழில்வாய்ப்பாக 10000 ஏற்படுத்த முடியுமெனவும் கம்பனி கூறுகின்ற அதேவேளை, இக்கம்பனி தொடர்ச்சியாக முழு வீச்சில் இயங்குமாக இருந்தால் இதற்கான மூலப்பொருட்களையும் இடைவிடாது உற்பத்தி செய்து விநியோகம் செய்யும் சந்தர்ப்பம் ஏற்படுமிடத்து ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியுமென கம்பனி கூறுகின்றது. இதனைவிட சிறிய சிறிய தொழில் வாய்ப்புக்களும் இங்கு உருவாகி இருப்பதனைக் காணலாம். உதாரணமாக தொழிலாளர்களுக்கான உணவினைத் தயாரித்து வழங்குதல்.
தொழிற்சாலை தொடர்பாக பரப்பப்படும் பிழையான கருத்துக்களும் வதந்திகளும்
1. மதுபான உற்பத்திசாலை அமைக்கப்படுகின்றது – இது மதுபான உற்பத்திசாலை அல்ல மதுசார உற்பத்தித் தொழிற்சாலை.
2. இத்தொழிற்சாலையில் இருந்து இலகுவாக மதுபான விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லலாம், இதனால் மதுபான விற்பனை அதிகரிக்கும் – இத்தொழிற்சாலையில் இருந்து மதுபான உற்பத்தியோ விநியோகமோ செய்யப்படுவதில்லை.
3. இந்தத் தொழிற்சாலையினை முன்னிறுத்தி மதுபான விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்படும் – மட்டக்களப்பிற்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து அனுமதிப்பத்திரங்களும் (58) ஏற்கனவே வழங்கப்பட்டு முடிந்து விட்டன. தற்போது வழங்கப்படுபவை உல்லாச பயணத்துறை சார்ந்ததாகும்.
4. நில அபகரிப்பும் குடியேற்றங்களும் – சனநாயக நாட்டில் தொழில் ரீதியாக மக்கள் எந்த இடத்திலும் நிலங்களை வாங்குவதற்கும் குடியிருப்பதற்கும் உரித்துள்ளவர்கள்.
5. கலாச்சாரப்பாதிப்பு –உல்லாசப் பயணத்துறையின் அபரிமிதமான வளர்ச்சி, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நோக்கிய குடும்பத் தலைவர்களது படையெடுப்பு, கிராமங்களில் மற்றும் நகரங்களில் ஏற்பட்டுள்ள நாகரீக மோக செயற்பாடுகள் போன்ற பல காரணிகளுடன் ஒப்பிடுகையில் இது பாரிய செல்வாக்கை செலுத்தாது.
6. தொழிற்சாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களும் அதன் பின்னணிகளும், முதலாளிகளைச் சார்ந்தவையாககாணப்பட்டனவே தவிர, ஏழை விவசாயிகளின் நலன்களையோ அல்லது சதாரண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டினையோ கருத்தில் கொள்ளவில்லை.
7. மதுபான வடிசாலைகள் மற்றும் மதுபான நிலையங்கள் குறைக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்வதற்கு பதிலாக, மதுசார உற்பத்தித் துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப்படுகின்றதானது மாவட்ட பொருளாதார அபிவிருத்திக்கு தடையாக அமையும்.

இலங்கையின் பேருவளையில் 4 மதுபான வடிசாலைகள் உண்டு. அங்கு எந்த ஆர்ப்பாட்டமும் அவர்கள் செய்யவில்லை, இதனால் அவர்களின் தென்னைப் பயிர்ச்செய்கையே விருத்தி அடைகின்றது.
எனவே கல்குடாவில் அமைக்கப்படுகின்ற மதுசார உற்பத்தித் தொழிற்சாலையானது இயங்கத் தொடங்கினால் பொது மக்கள் பல நன்மைகளை பெறுவதுடன் அவர்களின் வாழ்வாதாரமும் விருத்தி அடையும் என்பதில் ஐயமில்லை.
ஆனால் இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில், கூறப்பட்ட சாதகங்கள் மக்களைச் சென்றடைவதற்கும் பாதகத்தன்மைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தகுதிவாய்ந்த அரச நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளடங்கிய தொடர்ச்சியான கண்காணிப்புப் பொறிமுறை மிக அவசியம். அவ்வாறு இல்லாதவிடத்து கூறப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடக்கூடிய சூழல் ஏற்படலாம். எனவே இந்த விடயத்தில் மக்கள் பிரதிநிதிகள் மிகவும் நிதானமாக சிந்தித்து,பிரதேசத்தின் வளர்ச்சிக்கும் சமுக மேம்பாட்டுக்கும் உதவக்கூடிய வகையில் செயற்பட வேண்டும்.
மேலும் போதையற்ற இலங்கையை உருவாக்குவதில் மட்டக்களப்பு துறைசார் வல்லுநர்கள் மன்றத்திற்கு மாற்றுக்கருத்து இல்லை. உறுதியான தேசிய மதுபானக்கொள்கை ஊடாக,நடைமுறைச் சாத்தியமான மதுவிலக்கு நடவடிக்கைகளை காத்திரமாக மேற்கொள்வதன் மூலமே இது சாத்தியப்படும். தவிரவும் மதுவினால் ஏற்படும் சமூக பொருளாதார மற்றும் சுகாதார சீர்கேடுகளை இல்லாதொழிக்கும் திட்டங்களே நடைமுறைச்சாத்தியமான வெற்றியளிக்கும் திட்டங்களாகும்.