போட்டி ரீதியான அழுத்தங்கள் காரணமாக சிறுவர்களின் மனநிலை பாதிக்கப்படுகின்றது தளபாடங்கள் வழங்கும் நிகழ்வில் ஷிப்லி பாறுக்

sifly farook-a சிறார்களுக்கு அவர்கள் சுயமாக இயங்குவதற்குரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதனூடாகவே எதிர்கால சவால்களை வெற்றி கொள்ளக்கூடியவர்களாக அவர்களை உருவாக்க முடியும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். .

பாலமுனை ஜாமியா பாலர் பாடசாலையில் போதியளவு தளபாட வசதியின்மை காரணமாக மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இது விடயமாக இப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களிடம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருந்தனர்.
இதற்கமைவாக தனது சொந்த நிதியிலிருந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் இப்பாலர் பாடசாலைக்கான தளபாடங்களை 2017.05.02ஆந்திகதி-செவ்வாய்க்கிழமை வழங்கி வைத்து உரையாற்றும் போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
சிறுவர்களை சுயமாக இயங்கச் செய்வதன் மூலமாகவே அவர்களின் திறமைகளை உரிய விதத்தில் வெளிக்கொண்டுவர முடியும் என ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கல்வியில் முதல் தரத்தில் திகழும் பின்லாந்து நாட்டின் கல்வி முறைமை தற்போது அனைத்து நாடுகளுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது. அந்த நாட்டில் 7 வயதினிலேயே மாணவர்கள் பாடசாலைக்கு சேர்க்கப்படுகின்றனர். அங்கு சிறார்களுக்கு சுயமாக இயங்குவதற்குரிய சந்தர்ப்பங்கள் அதிகமாக ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது.
ஆனால் எமது பிரதேசங்களில் காணப்படும் போட்டி ரீதியான கல்வி மற்றும் அழுத்தங்கள் காரணமாக சிறுவர்களின் மனநிலை அதிகம் பாதிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் சவால்களுக்கு முகம்கொடுக்க முடியாத ஒரு பலவீனமான நிலைமையும் ஏற்படுத்துகின்றது.
குறிப்பாக பாடசாலை நேரம் தவிர்ந்த  ஏனைய நேரங்களிலும் அதிகமான மேலதிக வகுப்புகளில் மாணவர்களை ஈடுபடுத்துதல், ஏனைய பிள்ளைகளுடன் எமது பிள்ளைகளை ஒப்பிட்டு பேசுதல் மற்றும் பெற்றோர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பிள்ளைகளை இயங்கச் செய்தல் போன்ற விடயங்கள் தற்காலத்தில் எமது பிள்ளைகள் அதிகம் உள ரீதியான அழுத்தத்திற்கு உள்ளாவதர்கான முக்கிய காரணங்களாக இனங்காணப்படுகின்றது.
எனவே பெற்றோர்கள் சிறார்களினுடைய விடயத்தில் மிகவும் அக்கறையோடு செயற்பட வேண்டும்.  எமது சிறார்களுக்குரிய ஓய்வு நேரங்களை சிறந்த வித்தத்தில் பயன்படுத்துவதற்குரிய வாய்ப்புக்களை ஏற்படுத்தி வழங்குவதோடு அவர்களை சுயமாக இயங்கச் செய்வதன் மூலமாக எமது பிள்ளைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்குரிய சந்தர்பத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தனது உரையில் தெரிவித்தார்.