தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை விசாரணைகளை ஆரம்பிக்க அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்!-நிலாந்தன்

nilanthan-aசிவராமின் காலப்பகுதியில் தமிழரின் அரசியலை ஊடகவியலாளர்களே வழிநடத்தினார்கள் ஆனால் இன்றைய காலப்பகுதியில் ஊடகத்துறையை அதிகாரிகளும் அரசியல்வாதிகளே வழிநடத்துகின்ற துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.  இந்தநாட்டில் நல்லாட்சியை கொண்டுவந்த எமது அரசியல் தலைமைகள் குறிப்பாக இந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக உள்ள இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு காரணமானவர்களை கண்டறிவதற்கான ஒரு விசாரணை குழுவை அமைப்பதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில்  நடைபெற்ற சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் சிவராம் அவர்களின் 12 வது நினைவு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
மட்டக்களப்பு மாவட்டம் இன்று ஊடகத்துறையில் தனது தனித்துத்தை இழந்து நிற்கின்றது. அமரர் மாமனிதர் சிவராம் அண்ணன் அவர்களின் காலத்தில் மட்டக்களப்பின் ஊடக வளர்ச்சி என்பது ஊடகத்துறைக்கு அப்பால் சென்று தமிழ் தேசிய இனத்தின் ஒரு அரசியல் ஸ்திரத்தன்மையினை உருவாக்கும் அளவுக்கு ஆளுமை கொண்டதாக இருந்தது.
ஒரு விடுதலைப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் வடகிழக்கு பகுதியின் யதார்த்த சூழ்நிலைகளை உணர்ந்து மிகவும் காத்திரமான தமிழ் சமூகத்தை வழிநடத்துகின்ற ஒரு செயற்பாட்டு திறனை தமிழ் ஊடகத்துறை கொண்டிருந்தது.
குறிப்பாக மட்டக்களப்பில் சிவராம் நடேசன் உள்ளிட்ட பலரது ஊடகத்துறைமீதான பற்றுதல்கள் தமிழ் தேசிய இனத்தை வழிநடத்துவதிலும் பாரிய பங்களிப்பை செய்திருந்தது.
அதன் காரணமாகவே இன்று அவர்போன்றவர்களை நாம் நினைவு கூறுகின்றோம்.
அந்த காலப்பகுதியில் தமிழரின் அரசியலை ஊடகவியலாளர்களே வழிநடத்தினார்கள் ஆனால் இந்தக் காலப்பகுதியில் ஊடகத்துறையை அரசியல்வாதிகளே வழிநடத்துகின்ற துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பை பொறுத்தமட்டில் ஊடகத்துறையை எடுப்பார் கைப்பிள்ளை போன்று நடாத்துவதற்கு பலர் முயற்சிக்கின்றார்கள்.
அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களும் அரச நிர்வாகத்தில் உள்ளவர்களும் பணம் படைத்த முதலாலிகளும் ஊடகத்துறை என்பது அவர்களுக்கு சார்பாக இருக்கவேண்டும் சார்பாக எழுத வேண்டும் என்றே எண்ணுகின்றனர்.
குறிப்பாக அரசியல் கட்சிகள் தாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது அரசாங்கத்தின் ஊழல்கள் புறக்கணிப்புக்கள் அதிகார துஸ்பிரயோகங்களுக்கு எதிராக எழுதப்படும் செய்திகளை வரவேற்கின்றனர். ஆனால் அதே எதிர்க்கட்சி ஆழும் கட்சியாக மாறியவுடன் அந்த அரசாங்கத்தை எதிர்க்கின்ற ஊடகங்கள் மீதும் ஊடகத்துறை மீதும் தங்களது எதிர்ப்புக்களையும் அழுத்தங்களையும் பிரயோகிக்கின்றனர்.
அதாவது மாறி மாறி ஆழும் அரசாங்கங்களும் அவர்களுக்கு ஆதரவான அதிகாரிகளும் ஊடகவியலாளர்களை கழுகு கண் கொண்டே பார்க்கின்றனர்.
 இருந்தும் இந்த நாட்டில் நடைபெற்ற அநீதியான ஆட்சி அதிகாரங்களை மாற்றியமைப்பதில் ஊடகங்கள் தொடர்ந்தும் தங்களது காத்திரமான பங்களிப்பை செய்து கொண்டுதான் இருக்கின்றது.
இன்றை நிலையில் ஊடகத்துறை தனது சுயாதீனத்தை இழக்க ஆரம்பித்துள்ளது. அதாவது ஊடகத்துறையை அரசியல்வாதிகள் முதல் கொண்டு அதிகாரம் படைத்த பணபலம் படைத்த ஜம்பவான்கள் ஊடகத்துறையை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக இந்தியா போன்று இன்று இலங்கையிலும் ஆரசியல்வாதிகள் தங்களுக்கென்று ஒரு ஊடகத்தை உருவாக்குகின்றார்கள் அல்லது இருக்கின்ற ஒரு ஊடகத்தை ஆக்கிரமித்து கொள்கின்றார்கள். இதனால் ஊடகத்துறை தனது சுயாதினத் தன்மையை இழந்து நிற்கின்றது.
மிகவும் திட்டமிட்டு செய்யப்பட்ட தீயாகவே செய்திகள் பரப்பபடுகின்றன.
இன்று இலங்கையை பொருத்தமட்டில் ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் பல வகைகுறிப்பிற்குள் செயற்படுகின்றனர்.
அரசாங்கத்தையும் அவர்கள் சார்ந்தவர்களையும் திருப்திப்படுத்தும் ஊடகவியலாளர்கள்இ அரசாங்க அதிகாரிகளை திருப்திபடுத்த எழுதும் ஊடகவியலாளர்கள் அரச அதிகாரிகளை திருபதிப்படுத்த எழுதும் ஊடகவியலாளர்கள்இ அரசியல் கட்சிகளை திருப்திப்படுத்தும் ஊடகவியலாளர்களேன ஊடகவியலாளர்களை வகைப்படுத்தி ஊடகத்துரையை ஆக்கிரமித்துள்ளனர்.
ஆனால் இந்த வகைக்குள் அகப்படாது அரச இயந்திரத்தின் அநீதிகளுக்கு எதிராக உண்மைகளை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள் பல்வேறு அழுத்தங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகின்றனர்.
இன்று சுதந்திரமாக சுயாதினமாக உண்மைகளை உண்மையாக எழுதுகின்ற ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பில்லை அவர்கள் ஊடக நிறுவனங்களால் தனித்துவிடப்படுவதுடன் அதிகாரப் பலிவாங்கள்களுக்கும் உட்படுகின்றார்கள்.
அவர்கள் மீது பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அன்மையில் மட்டக்களப்பு கல்குடா மதுசார தொழில்சாலையை படமெடுக்கச் சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கான நீதி பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
இவ்வாறான சூழலில் மட்டக்களப்பில் சிறந்த நடுநிலையான சுயாதீனத்தை இழக்காத ஆழுமையுள்ள ஊடக சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒத்துழபை;பு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன். இந்த நாட்டில் இன்றும்
வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன ஊடகவியலாளர்கள்  பாதுகாப்பு தரப்பினரால் கண்காணிக்கப்படுவதுடன் அவர்களுக்காக பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
அத்துடன் அரச அதிகாரவர்க்கத்தின் அநீதிகளை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதோடு பெலீஸ்விசாரணைகள் ஊடாகவும் இனந்தெரியாத நபர்களின் மூலமும் அச்சுறுத்தப்படுகின்றனர்.
 அத்துடன் இந்த நாட்டில் பெரும்பான்மை இன ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க  ஏக்நெலிகொட ஆகிய பெரும்பான்மையின ஊடகவியலாளர்களின் படுகொலைகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நல்லாட்சி அரசு இது வரை ஒரு சிறுபான்மையின ஊடகவியலாளரின் படுகொலை விசாரணையை கூட ஆரம்பிக்கவில்லை.
இலங்கையில் இன்று வரை 43 ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். இதில் 35 தமிழ் ஊடகவியலாளர்களும் 05 சிங்கள ஊடகவியலாளர்களும் 03 முஸ்லீம் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களின் ஆட்சிக்காலத்தில் 01 ஊடகவியலாளரும் ரணசிங்க பிரேமதாச அவர்களின் ஆட்சிக்காலத்தில் 02 ஊடகவியலாளரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் 13 ஊடகவியலாளர்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 26 ஊடகவியலாளர்களும் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.
எனவே இந்தநாட்டில் நல்லாட்சியை கொண்டுவந்த எமது அரசியல் தலைமைகள் குறிப்பாக இந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக உள்ள இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு காரணமானவர்களை கண்டறிவதற்கான ஒரு விசாரணை குழுவை அமைப்பதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் சார்பாக முன்வைக்கின்றோம். என்றார்