விநாயகபுரம் கிராமத்திலுள்ள காளி கோவிலில் தங்கநகைகள் திருட்டு

திருக்கோவில்,  விநாயகபுரம் கிராமத்திலுள்ள காளி கோவிலில் சுமார் 10 பவுண் தங்கநகைகள் திருட்டுப் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கோவிலின் கருவறைக் கதவு  திங்கட்கிழமை (2) இரவு உடைக்கப்பட்டு, அம்மனுக்கு அணியப்பட்டிருந்த தங்கநகைகள் திருடப்பட்டுள்ளன. அட்டியல், தோடு, தங்கச்சங்கிலி உள்ளிட்ட நகைகளே திருட்டுப் போயுள்ளன.

இந்தக் கோவிலில் தொண்டுப் பணி செய்யும் ஒருவர், வழமை போன்று இன்று காலை பரிவாரத் தெய்வங்களுக்குப் பூக்கள் வைத்து வணங்கிக்கொண்டு வந்தார். இதன்போது, கோவிலின் கருவறைக் கதவு உடைக்கப்பட்டுள்ளதையும் அம்மன் சிலை விலகியுள்ளதையும் அவர் அவதானித்துள்ளார்.

இது தொடர்பில் மேற்படி கோவில் நிர்வாகத்தினருக்கு மேற்படி நபர் அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து,  கோவிலுக்கு வருகைதந்த நிர்வாகத்தினர் கோவிலில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தை அவதானித்துள்ளதுடன், பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், மோப்பநாய் சகிதம் கோவிலுக்கு வருகை தந்த பொலிஸார், விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

tx

tamilmirror