சம்பந்தன் ஐயா நினைத்தால் மறுகணம் எங்களுக்கான தொழில் வாய்ப்பினை பெற்றுத்தரமுடியும்

பட்டம் பெற்றும் இரவு பகலாக வீதியோரத்தில் கிடக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதுடன் எமது சத்தியாக்கிரக போராட்டத்தினை தொடந்து செய்வதற்கு பணமின்றி பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் என அம்பாறை காரைதீவில் 64 நாட்களாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரிகள் எதிர்க்கட்சி தலைவரிடம் தங்களது நிலைப்பாடு பற்றி தெளிவு படுத்தி இருந்தார்கள்.

நேற்று அம்பாறை காரைதீவு விபுலானந்தர் சிலைக்கு அருகில் 64 நாட்களாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரிகளை எதிர்க்கட்சிதலைவர் உட்பட ஏனைய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களை சந்தித்தபோதே இதனை தெரிவித்தார்கள்.

வேலையற்ற பட்டதாரிகள் தங்களது ஆதங்கங்களை பின்வருமாறு எடுத்துக்கூறினார்கள் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறான கருத்துக்களை வெளியிடுகின்றார்களே தவிர எங்களுக்கான எந்த நல்ல தீர்வினையும் தருவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் அண்மையில் கூறியிருந்தார் கிழக்கு மாகாணத்தில் ஆசிரிய வெற்றிடங்கள் 4203 பேருக்கு  இடம் இருப்பதாகவும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு 200 பேருக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாகவும் அதற்கான வேலைகளை செய்து வருவதாகவும் கூறியிருந்தார் ஆனால் இதுவரை எதுவும் நடந்ததாக இல்லை.

இங்கு வருபவர்கள் எல்லோரும்; கால அவகாசந்தான் கேட்கின்றார்கள் ஆனால் இதுவரை 2 மாதங்கள் கழிந்தும் ஆண்கள், பெண்கள் என நாங்கள் வீதியோரத்தில்த்தான் வாழ்நாளை கழித்து வருகின்றோம். இங்கு எத்தனையோ பெண்கள், (கற்பிணிமார்கள்) தங்களது சிறு குழந்தைகளுடனும் கொழுத்தும் வெயிலிலும் வீதியோரத்தில் வீற்றிருக்கின்றோம் நாங்கள் ஆசிரியர் தொழிலை மாத்திரம் கேட்கவில்லை ஏனைய திணைக்களங்களில் அதிகளவான வேலைவாய்ப்புக்கள் இருப்பதாக அறிகின்றோம் அந்த வெற்றிடங்களுக்கும் எங்களில் பலருக்கு தொழிலினை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது.

இன்று இந்த இடத்திலே எங்களை சந்திக்க வந்திருக்கும் சம்பந்தன் ஐயா நினைத்தால் மறுகணம் எங்களுக்கான தொழில் வாய்ப்பினை பெற்றுத்தரமுடியும் அவ்வாறான பலம் பொருந்தியவராகவே இருந்து கொண்டிருக்கின்றார் அதாவது பாராளுமன்றத்தில் எங்களுக்கான ஒரு சட்டமூலத்தினை கொண்டு வந்து அதன்மூலம் தொழில் வாய்ப்பினை பெற்றுத்தரமுடியும். ஆனால் எங்களை பற்றி கதைப்பதற்கு எந்த தலைமைகளும் இதுவரை முன்வரவில்லை அந்த விடயம் எங்களை பொறுத்தவரையில் மிகவும் மனவேதனை தரும் விடயமாகும்.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்ட மாகாணசபை உறுப்பினர்கள், 4க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்றார்கள் ஆனால் இதுவரையில் எங்கள் நலன் சார்ந்த எந்த தீர்வினையும் பெற்றுத்தரவில்லை எதிர்க்கட்சி தலைவராகிய நீங்கள் தான் இதற்கான தீர்வினை பெற்றுத்தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்

. இது தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் கருத்துரைக்கையில் தமிழ் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டிருந்தால் இதுதொடர்பாக உரிய இடத்தில் கதைத்து அந்த விடயம் தொடர்பாக உண்மையான நிலையினை அறிந்து அந்த புறக்கணிப்பை நிவர்த்தி செய்யக்கூடிய விதத்தில் அரசாங்கத்தினை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்போம். இது தொடர்பாக கொழும்பிற்கு சென்றவுடன் தாமதமின்றி இதற்கான தீர்வினை பெற்றுத்தர பாடுபடுவேன் எனவும் எதிர்க்கட்சித்தலைவர் உறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது..amparai-a amparai-b