அடுத்தவர் காணியில் அத்துமீறிப் புகுந்து விகாரை அமைக்கப் புத்தர் கூறவில்லை – தீகவாபி ரஜமகா விகாரை பிக்கு தெரிவிப்பு

மற்­றொ­ரு­வ­ரின் காணி­யில் அத்­து­மீறி விகாரை அமைக்­கு­மாறு புத்­த­பெ­ரு­மான் ஒரு போதும் கூற­வில்லை என்று தீக­வாபி சைத்­திய ரஜ­மகா விகா­ரை­யின் முதன்­மைப் பிக்கு போத்­தி­வெல சந்­தா­னந்த தேரர் தெரி­வித்­தார்.
இறக்­கா­மம் மாயக்­கல்லி மலைப் பகு­தி­யில் புத்­தர் சிலை நிறு­வும் விவ­கா­ரம் தொடர்­பில் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
மாயக்­கல்­லி­யில்  முஸ்­லிம்­கள் நீண்ட கால­மாக வாழ்­கி­றார்­கள். பூர்­வீ­கக் காணி­க­ளில் இருந்து அவர்­க­ளைச் சுய விருப்­ப­மின்றி அகற்றி விகாரை அமைக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. மாணிக்­க­ம­டு­வுக்கு அரு­கி­லேயே தீக­வாபி உள்­ள­தால் இங்கு மற்­றொரு விகாரை அவ­சி­ய­மில்லை.
தொல்­லி­யல் சின்­னங்­களை பாது­காக்­கும் பொறுப்பு எல்லா இனங்­க­ளை­யும் சார்ந்­தது. இதனை ஒரு குறிப்­பிட்ட குழு தான்  செய்­ய­வேண்­டும் என்­ப­தில்லை. மாணிக்­க­மடு மாயக்­கல்லி விட­யத்­தி­னால் அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள கணி­ச­மான சிங்­கள மக்­கள் கவ­லை­ய­டைந்­துள்­ள­னர். பௌத்த மக்­கள் தமிழ், முஸ்­லிம் மக்­க­ளு­டன் என்­றுமே நல்­லு­ற­வைப் பேணி வரு­கின்­ற­னர். அவர்­கள் இந்த நாட்டு மக்­கள். எமது சகோ­த­ரர்­கள்..
தீக­வா­பி­யைச் சுற்­றி­லும் பல விகா­ரை­கள் உள்­ளன. ஆனால் புத்த பெரு­மானை வணங்­கு­ப­வர்­கள் மிகக் குறை­வா­ன­வர்­களே. அப்­ப­டி­யி­ருக்­கும்­போது மற்­று­மொரு விகாரை மாணிக்­க­ம­டு­வில் எதற்கு ? மகிந்த சிந்­த­னைக்­குட்­பட்ட பௌத்த பிக்­கு­க­ளின் எதேச்­ச­தி­கா­ரப் போக்கே இது.
இனங்­க­ளி­டையே முறு­கல் நிலை­யைத் தோற்­று­விக்க எடுக்­கப்­ப­டும் செயற்­பா­டு­களே இவை. அத்­து­டன் எமது மாவட்ட  மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்க நாம் இருக்­கி­றோம். ஞான­சார தேரர் இங்கு வர வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இத­னைப் பார்க்க அவர் யார்? அவர் இனங்­க­ளைத் தூண்­டி­வி­டும் ஒரு குழப்­பக்­கா­ரர். ஏனைய இனங்­கள் மத்­தி­யில் வாழும் கணி­ச­மான பௌத்­தர்­கள் இவ­ரது கொள்­கையை ஆத­ரிக்­க­வில்லை.
இந்த நாடு பௌத்­தர்­க­ளுக்கே சொந்­த­மென சிலர் கூறு­கின்­ற­னர். புத்த மதத்தை இலங்­கைக்கு கொண்டு வந்த மகிந்த தேரர்­கூட தேவ­நம்­பிய திஸ்ஸ மன்­ன­னி­டம் இந்த நாடு எல்லா உயிர்­க­ளுக்­கும் சொந்­தம், உமக்கு மாத்­தி­ர­மல்ல, இந்த நாட்டை நிர்­வ­கிக்­கும் பொறுப்பே உமக்­கு­ரி­யது என்­றார். இதனை பௌத்­தர்­கள் கவ­னத்­தில் கொள்ள வேண்­டும் – எனத் தெரி­வித்­தார் சந்­தா­னந்த தேரர்.