
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.
தந்தை செல்வா நினைவு நிகழ்வு மட்டக்களப்பில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
1961ஆம் ஆண்டு காலப் பகுதியில் சத்தியாக்கிரத்தில் நானும் மாணவனாக இருந்தபோது பங்குபற்றியிருந்தேன். அந்தக் காலத்தில் இடம் பெற்ற சம்பவங்களை நினைத்துப் பார்க்கின்றேன். கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங் களில் முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றுக் கொண்டமை இன்னும் கண்முன்னே இருக்கின்றது.
அந்தக் காலத்திலிருந்தே தமிழர் தாயகத்தில் முஸ்லிம்களுக்கும் பங்கு உள்ளதை தந்தைசெல்வா கூறியிருந்தார். இந்த தமிழர் தாயகப் பிரதேசம் முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமானது என்பதையும் அவர் கூறியிருக்கின்றார். மறைந்த தலைவர் அஷ்ரப்கூட தமிழர் விடுதலை கூட்டணி ஊடாகவே அரசியலுக்குள் பிரவேசித்திருந்தார். அவர் இறக்கும் வரை எங்களுக்கும் அவருக்கும் எந்தவித முரண்பாடுகளும் ஏற்பட்டதில்லை.
வடக்கு -– கிழக்கு மாகாணம் ஏன் இணைந்திருக்க வேண்டும் என்பதை 1949ஆம் ஆண்டு தந்தை செல்வா மிகவும் தெளிவாக சுட்டிக் காட்டியிருக்கின்றார். யாழ்ப்பாணம் தமிழர்களை நிறைவாகக் கொண்ட பிரதேசம். ஆனால் கிழக்கு மாகாணத்தில் அவ்வாறில்லை. பல இனத்தவர்கள் வாழ்கின்றனர். இங்கு தமிழரின் பலம் குறைவாக இருக்கின்றது. கிழக்கு மாகாணத்தின் பலத்துக்கு துணையாக வடக்கு மாகாண மக்களின் பலம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டமையால் இந்த முடிவு எடுக்கப்பட்டது – என்றார்.