உழைக்கும் மக்களுக்கு நிவாரணம்

நாட்டில் உழைக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய பல பிரேரணைகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படுமென்று அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக, வேலைத்தளங்களில் உயிரிழக்கும் ஊழியர்களுக்காக செலுத்தப்படும் இழப்பீட்டுத் தொகை 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவில் இருந்து 10 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்படும். இந்த இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துவதற்கு வேலைகொள்வோரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
15 பேருக்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட சேவை நிலையங்களில் அதன் உரிமையாளர் அவர்களுக்காக காப்புறுதித் தொகையை அவசியம் செலுத்த வேண்டுமென்பதை புதிய சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
16 வயதிற்கு குறைந்த சிறுவர்களை பணியில் ஈடுபடுத்துவது தொடர்பில் குற்றவாளியாக காணப்படும் நபரிடம் இருந்து அறவிடப்படும் தண்டப் பணம் 25 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது. மகப்பேற்று விடுமுறை தொடர்பில் தற்போது நிலவும் முரண்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.