அதிகூடிய வட்டி வீதத்தில் கடனைப்பெற்று கடனாளிகளாக மக்கள் மாறுகின்றனர்.

(படுவான் பாலகன்) இலகுவான முறையிலும், குறைந்த வட்டி வீதத்திலும் சமூர்த்தி வங்கிகள் ஊடாக கடன் தொகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், இவ்வங்கிகளில் கடன்களை பெறாமல், கிராமங்களுக்கு வருகின்ற, அதிகூடிய வட்டி வீதங்களை அறவீடு செய்கின்ற ஏனைய நிதிநிறுவனங்களில் கடன்பெற்று கடனாளிகளாக மக்கள் மாறிக்கொண்டு வருகின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் பி.குணரெத்தினம் குறிப்பிட்டார்..

கொக்கட்டிச்சோலை சமுதாய அடிப்படை வங்கியின் ஏற்பாட்டில், முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டு கழக மைதானத்தில்  ஞாயிற்றுக்கிழமை(30) நடைபெற்ற சித்திரைப் புதுவருட விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர், அங்கு உரையாற்றுகையில்,

வறுமை குறைந்த மக்களின் வாழ்க்கைதரத்தினை உயர்த்தி, எதிர்காலத்தில் சிறந்த சமுதாயத்தினையும், வருமானம் கூடிய மக்களையும் கட்டியெழுப்பும் நோக்கத்துடன், இலங்கையில் 20வருடங்களுக்கு மேலாக சமூர்த்தி உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றது.

சமூர்த்தி திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் 29சமூர்த்தி வங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலே இரண்டு சமூர்த்தி வங்கிகள் இயங்குகின்றன. சமூர்த்தி வங்கிகள் சேமிப்புக்களை ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், மக்களுக்கு தேவையான ஜீவனோபாயத்தினையும் மேம்படுத்திக் கொள்வதற்காக கடன்களை வழங்கி வருகின்றன.

மிகவும் இலகுவான முறையில் இக்கடன் தொகைகள் வழங்கப்படுகின்றன. இருந்தும் இவ்வங்கிகளில் கடன்களை பெறாமல், கிராமங்களுக்கு வருகின்ற ஏனைய நிதிநிறுவனங்களில் கூடிய வட்டிக்கு கடன்பெற்று கடனாளிகளாக மக்கள் மாறிக்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே நிதிநிறுவனங்களில் பெற்ற கடனை அடைப்பதற்காக சமூர்த்தி வங்கியில் கடனை கோருகின்ற நிலை நம்மக்கள் மத்தியிலே இருக்கின்றன. அதேவேளை, வறுமைகூடிய மாவட்டமாகவும், மதுபாவனைக்கு அடிமையான மாவட்டமாகவும் மட்டக்களப்பு உள்ளமை வேதனையான விடயமாகும். அதேபோன்று தற்போது சட்டவிரோத கசிப்பு உற்பத்திகளும் நடைபெறுவதாக அறிமுடிகின்றது. இவற்றினை இல்லாமல் செய்வதற்கும் மக்கள் ஒன்றுசேர வேண்டும். என்றார்.