எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில் சரோஜா வேலைத்திட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (24) இடம் பெற்றன.
மாவட்டத்தில் உள்ள பிள்ளைகளுக்கான அதியுச்ச பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பொலிஸ் திணைக்களம் மற்றும் மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலக பிரிவுகளில் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளான பிள்ளைகளின் தரவுகளை பிரதேச செயலக பிரிவுகளுக்கு வழங்கி பொருத்தமான பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் துறைசார் நிபுணர்களின் கருத்துக்களை பெற்றுக்கொண்டு உரிய உபாயங்களினூடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சரோஜா வேலைத் திட்டத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பான தெளிவூட்டல்களை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எல்.எம் ஜமில் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் சிறார்களே எதிர்கால தலைவர்கள் அவர்களை பாதுகாக்க வேண்டியது எமது கடமை என்பதுடன், சிறார்களுக்கு பாதிப்பு எற்பட முன்பு அவர்களை பாதுகாக்க வேண்டியது உத்தியோகத்தர்களின் கடமை என்பதுடன் சிறார்கள் விடயத்தில் உத்தியோகத்தர்கள் மிகவும் சிரத்தையுடன்
செயற்படவேண்டும் என அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிரதேச செயலாளர்கள், பிராந்திய சுகாதார பணிமனையின் உயர் அதிகாரிகள், வலயக்கல்வி பணிப்பாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், என பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பொலிஸ் பிரிவில் 963 பிள்ளைகள் பாதுகாப்பு தேவையுடையவர்களாக அடையாலம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


