மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் இருந்து பதவி உயர்வு பெறும் 5வது அதிகாரி

0-0x0-0-0#

மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் யோ. ஜெயச்சந்திரன் வட மாகாண கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்று பதவி உயர்வு பெற்றுள்ளார்.

அரச சேவை ஆணைக்குழு இந்நியமனத்தினை வழங்கி உள்ளது.

இவர் இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1ஐ சேர்ந்தவர் ஆவார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் சேவையாற்றிக்கொண்டு இருக்கும் போதே எட்டு வருடங்களுக்குள் ஐவர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். குறித்த வலயத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளராக சேவையாற்றிக் கொண்டிருக்கும் போதே சி. சிறிதரன், செ. மகேந்திரகுமார், அனந்தரூபன் ஆகியோர் வலயக் கல்விப் பணிப்பாளர்களாக பதவி உயர்வு பெற்று தற்போதும் கடமையாற்றுகின்றனர். அதே போன்று மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய அகிலா கனகசூரியம்  கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு சென்றார். அதேபோன்று தற்போதைய கல்விப் பணிப்பாளர் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்.

அவ்வாறு நியமனம் பெற்றுள்ள கிழக்கு மாகாணத்தின் திருக்கோயிலை பிறப்பிடமாக கொண்ட யோகேந்திரா ஜெயச்சந்திரன் ஆரம்பக் கல்வியை திருக்கோவில் மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலத்திலும் பின்னர் இடைநிலைக் கல்வியை தம்பிலுவில் தேசிய கல்லூரியில் கற்று அதன் பின்னர் உயர் கல்வியை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் கற்று அங்கிருந்து வணிகப் பிரிவில் சிந்தியடைந்து கிழக்கு பல்கலைக் கழகத்தில் வணிகத்துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவராவர்.

பட்டப்படிப்பை நிறைவு செய்த இவர், இலங்கை கல்வி நிர்வாக சேவையில் சித்தியடைந்து  அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் திட்டமிடல் பிரதி கல்விப் பணிப்பாளராக முதல் நியமனத்தை பெற்றார் தொடர்ந்து   கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திலும் கடமையாற்றிய இவர், திருக்கோவில் வலயக் கல்வி வலயத்தில் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியதோடு 2018.12.20முதல் திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்று சிறந்த சேவையாற்றியுள்ளார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளராக 2023.07.21ஆம் திகதி நியமனம் பெற்ற இவர் இவ்வலயத்தின் வளர்ச்சிக்காக தற்போது வரை அர்ப்பணிப்பான சேவையாற்றி வரும் நிலையிலேயே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையேற்று இரு வருடங்கள் நிறைவு பெற உள்ள நிலையில் வலய மாணவர்களின் வளர்ச்சிக்காக பல்வேறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார். குறிப்பாக குறித்த வலயம் கஷ்ட அதிகஸ்ட பாடசாலைகளை உள்ளடக்கியதாகும். இங்கு மாணவர்களின் இடைவிலகல் அதிகமாக இருந்த நிலையில் பல்வேறான செயற்பாடுகள் ஊடாக இடைவிலகல் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதனை தற்போதைய புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் எல்லைப் புற பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் வகையில் பல்வேறான முன்னெடுப்புகளை முன்னெடுத்தமையுடன், அடிக்கடி

தரிசிப்புகளையும் மேற்கொண்டு ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் செய்துள்ளார்.

எல்லைப்புறத்தினை மையமாக கொண்டு போட்டிகளையும், நிகழ்வுகளையும் நடாத்தி எல்லைப்புற பாடசாலைகளை ஏனையவர்களும் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளார். இணைப்பாட விதான செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட்டமையுடன் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு சிறப்பிடம் வழங்கி அனைத்து பாடசாலைகளிலும் இல்ல விளையாட்டு போட்டிகளை நடாத்துவதற்கு உந்துசக்தி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தேசியமட்ட போட்டிகளில் மாணவர்கள் பங்கெடுப்பதற்கும் வெற்றி பெறுவதற்கும் மாணவர்களுடன் களத்தில் நின்று பயிற்சிகளை வழங்கி உள்ளார்

தேசிய ரீதியாக சாதிக்கும் மாணவர்கள், சாதனைக்கு காரணமான பயிற்றுவிப்பாளர்களை கௌரவப்படுத்தும் வகையில் நிகழ்வுகளில் அதிதிகளாக அழைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்தமையுடன், வலய வரலாற்றில் சாதனையாளர் நிகழ்வை நடாத்தியமையுடன், வலய அனைத்து நிகழ்வுகளிலும் களத்தில் நின்று சகல வேலைகளிலும் சாதாரண மனிதராக செயற்பட்டமையுடன், வலய மாணவர்களின் எழுத்தறிவு, எண்ணறிவை அதிகரிக்க செயற்பாடுகளை முன்னெடுத்தமையுடன், தேசிய பரீட்சைகளில் மாணவர்கள் சித்தி பெறுவதற்கு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தியதுடன், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்களின் முழுமையான சேவையை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் பல்வேறு முறைகளை கையாண்டிருந்தமை எடுத்துக்காட்டத்தக்கது.

இவரின் பதவி உயர்வுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது