கிழக்குப் பல்கலைக்கழக தத்துவம் மற்றும் விழுமியக்கற்கைகள் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும் சோமசுந்தரம் ஜெகநாதன் 2024.06.19 அன்றுமுதல் பேராசிரியராப் பதவி உயர்வு பெற்றுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் தேத்தாத்தீவு கிராமத்தில் சோமசுந்தரம் வள்ளியம்மை ஆகியோருக்கு இளைய மகனாப் பிறந்த அவர் தனது பாடசாலைக் கல்வியை மட்/பட்/தேத்தாத்தீவு மகாவித்தியாலயம் மற்றும் மட்/பட்/ செட்டிபாளையம் மகாவித்தியாலயத்திலும் பயின்றார்.
க.பொ.த உயர்தரம் சித்தி பெற்று இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைக்கு 2001ஆம் ஆண்டு தெரிவாகித் தனது பட்டப்படிப்புக் கல்வியைத் தொடர்ந்தார் .
மெய்யியல் சிறப்புப் கற்கை நெறியில் பயின்று இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி பட்டத்தினை பெற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணி மற்றும் உளவியல் பட்டப்பின் டிப்ளோமா ஆகிய பட்டங்களைப் பெற்றவர்.
பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் கலாநிதிப் பட்டத்தை நிறைவு செய்தார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைமாணிப் பட்டத்தினை நிறைவு செய்தவுடனேயே சமூக விஞ்ஞானத்தறையில் மெய்யியல் பாடத்திற்கான தற்காலிக உதவி விரிவுரையாளராக 2005ஆம் ஆண்டு நியமனம் பெற்ற அவர் அப்பதவி நிறைவுறும் முன்னமே நிரந்தர விரிவுரையாளராக 2008ஆம் ஆண்டு நியமனம் பெற்றார்.
தற்போது மெய்யியவில் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றும் இவர் 1991ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட மெய்யியல் பாடத்திற்கான முதலாவது பேராசிரியராகவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது மெய்யியல் பேராசிரியராகவும் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் மெய்யியல் துறையில் பணியற்றும் இளம் பேராசிரியராகவும் உள்ளார்.
சமூக விஞ்ஞானத்தறையின் கீழ் ஒரு பாடமாக இருந்த மெய்யியல் 2017ஆம் ஆண்டு தத்துவம் மற்றும் விழுமியக்கற்கைகள் துறை என்ற பெயரோடு தனித்துறையான போது அத்துறையின் முதலாவது துறைத்தலைவராகவும் இவரே பணியாற்றினார். மேலும் கலை கலாசார பீடத்தின் வெளிவாரிக் கற்கைகளுக்கான இணைப்பாளராகவும் விடுதிக் காப்பாளராகவும் மாணவ ஆலோசகராகவும் கலை கலாசாரப்பீட மாணவர் ஒன்றியத்தின் பெரும் பொருளாலராகவும் பணியாற்றியவர்.
பௌத்தம் : ஒரு மெய்யியல் பார்வை (2021), மற்றும் தென்னாசிய மெய்யியல் : தொகுதி I
(2022), தென்னாசிய மெய்யியல் : தொகுதி II(2023), மெய்யியல் பிரச்சினைகள், விஞ்ஞான மெய்யியல் (2007) எனும் நூல்களின் ஆசிரியரான இவர் இலங்கையின் பல பல்கலைக் கழகங்களில் நடைபெற்ற தேசிய மற்றும் சர்வதேச ஆய்வரங்குகளில் பல ஆய்வுக்
கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். தென்னாசிய மெய்யியல், அளவையியல், உளவியல், ஒழுக்கவியல், அரசியல் மெய்யியல் ஆகிய துறைகளில் ஈடுபாடுடைய இந் நூலாசிரியர் உலகத் தரம் வாய்ந்த சஞ்சிகைகளில் பல ஆய்வுகளைச் சமர்ப்பித்துள்ளார்.
இதற்காக உபவேந்தர் விருதினையும் 2024இல் பெற்றார். பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்ற சோமசுந்தரம் ஜெகநாதன் அவர்களுக்கு கல்விச் சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


