மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் கிழக்கு மாகாணத்தில் முதன்நிலை

அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மூன்று பாடங்களிலும் சித்திபெற்ற மாணவர் சதவீதத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் முதன்நிலையைப் பெற்று சாதனையை நிலைநாட்டியுள்ளது.

குறித்த வலயப்பாடசாலைகளில் இருந்து 429மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 333மாணவர்கள் சித்திபெற்றிருக்கின்றனர். அவ்வடிப்;படையில் 77.6வீதமான சித்தி பெறப்பட்டுள்ளது. இதுவே கிழக்கு மாகாணத்தின் அதிக சித்திவீதமாகும். இரண்டாவது இடத்தினை 73.8சதவீதத்தினைப் பெற்று மட்டக்களப்பு மத்தி வலயமும், மூன்றாவது இடத்தினை 72.2வீதத்தினைப் பெற்று மூதூர்; கல்வி வலயமும் பெற்றுள்ளது.

இதேவேளை கலைப்பிரிவில் மாவட்டத்தில் இரண்டாம் நிலையை இவ்வலயத்திற்குட்பட்ட மாணவரொருவர் பெற்றுள்ளார். மொத்தமாக 17A தர சித்திகள் பெறப்பட்டுள்ளதுடன், அதிகுறைந்த மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்திப்பெற தவறிய வலயம் என்ற சாதனையையும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் பெற்றுள்ளமை எடுத்துக்காட்டத்தக்கது. மாகாணத்தில் 1400மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்திபெற தவறியுள்ள நிலையில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 15மாணவர்களே மூன்று பாடங்களிலும் சித்திபெறத் தவறியுள்ளனர்.

அம்பாறையில் 229மாணவர்களும், கல்முனை கல்வி வலயத்தில் 140மாணவர்களும், மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 125மாணவர்களும் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 109மாணவர்களும் திருகோணமலை கல்வி வலயத்தில் 104மாணவர்களும் சித்திபெற தவறியுள்ளனர். இதனடிப்படையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வளர்ச்சி பாராட்டப்பட வேண்டியதாகும்.

கஸ்ட, அதிகஸ்ட பாடசாலைகளை மட்டும் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்வி வலயத்தில் எவ்விதமான தேசிய பாடசாலைகளும் இல்லை. இதேவேளை பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடம், பௌதீக வளத்தேவை, பொதுப்போக்குவரத்தேவை, காட்டுவிலங்குகளின் தாக்கத்திற்கு அடிக்கடி உள்ளாகும் பாடசாலைகளை கொண்ட இவ்வலயம் இச்சாதனையை நிலைநாட்டியுள்ளமை எடுத்துக்காட்டனதாகும்.

இக்கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட்டு முதன்முறையாக 2010ஆம் ஆண்டு உயர்தரத்தில் கலைப்பிரிவில் மாத்திரமே மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர் அவ்வருடம் 71.59வீதமான சித்தியை இவ்வலயம் பெற்றுக்கொண்டது. 2012இல் கலை, வர்த்தகம் ஆகிய பிரிவுகளில் பரீட்சைக்கு இவ்வலயத்திற்குட்பட்ட மாணவர்கள் தோற்றினர். அவ்வருடத்தில் கலைப்பிரிவில் 40.51வீதமான சித்தியும், வர்த்தகப்பிரிவில் 100வீதமான சித்தியும் கிடைக்கப்பெற்றிருந்தது.

2014இல் விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம், கலை ஆகிய பிரிவுகளில் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர். அவ்வருடத்தில் விஞ்ஞானப்பிரிவில் எந்தவொரு மாணவரும் சித்தியடையவில்லை. 2016இல் புதிதாக பொறியியல் தொழிநுட்ப பாடத்திற்கும் மாணவர்கள் இவ்வலயத்தில் இருந்து பரீட்சைக்கு தோற்றினர் அப்போது குறித்த பாடத்தில் 10வீதமான சித்தியே பெறப்பட்டிருந்தது. பின்னர் வந்த காலங்களில் உயர்தரத்தில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி வருகின்றனர்.

இவ்வலயத்தில் ஐந்து 1AB பாடசாலைகளும், பதின்மூன்று 1C பாடசாலைகளும் உள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு இவ்வலயத்தின் உயர்தர சித்திவீதம் 71.19ஆகவும், 2022இல் 77.76வீதமாகவும், 2023இல் 73.99வீதமாவும் காணப்படுகின்றமை வலயத்தின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுக்கின்றது.

பல்வேறான வளப்பற்றாக்குறையுடன் பாடசாலைகள் இயங்கினாலும் அனைவரினதும் அர்ப்பணிப்பினாலையே கிழக்கு மாகாணத்தில் இச்சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

இதற்காக சித்தி பெற்ற மாணவர்களுக்கும், அதற்காக உழைத்த பெற்றோர்கள், கற்பித்த ஆசிரியர்கள், வழிப்படுத்திய அதிபர்கள், ஆலோசனைகளை வழங்கிய ஆசிரிய ஆலோசகர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், உத்திகள், வழிப்படுத்தல்கள், திட்டங்களை சரியாக வழங்கி நெறிப்படுத்திய பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், புதிய செயற்பாடுகளையும், வழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும், நெறிப்படுத்தல்களையும், மேற்பார்வையினையும் சிறந்த தலைமைத்துவத்தினையும் வழங்கிய மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் ஆகியோருக்கும் மட்டக்களப்பு மேற்கு கல்வி சமூகத்தினர் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.