எங்கள் கூட்டணியின் வளர்ச்சி மற்றும் மக்கள் நம்பிக்கையின் ஆழத்தை சகிக்க முடியாமல், தரமற்ற, சான்றுகளற்ற, முற்றிலும் பொய்யான வதந்திகளை பரப்பும் பணிகளில் சில தமிழ் போலித் தேசியவாத குழுக்கள் ஈடுபட்டுள்ளனர் என கிழக்குத் தமிழர் கூட்ட்ணியில் அங்கம் வகிக்கும் கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
கிழக்குத் தமிழர் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்படுகின்றமை, அதனைத் தொடர்ந்தான அரசியற் சூழ்நிலைகள் குறித்து தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இன்று, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் அபிவிருத்தி இலட்சியத்தை நிலைநாட்டும் நோக்கத்துடன் உருவாகியுள்ள கிழக்கு தமிழர் கூட்டணி, மக்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு பெற்றிருப்பதோடு, சர்வதேச அரங்கிலும் கவனிக்கப்பட்டு வரும் அரசியல் சக்தியாக திகழ்கின்றது.
எங்கள் கூட்டணியின் வளர்ச்சி மற்றும் மக்கள் நம்பிக்கையின் ஆழத்தை, சில தமிழ் போலி தேசியவாத குழுக்கள் மற்றும் அரசியல் நோய்க்குழுக்கள் சகிக்க முடியாமல், தரமற்ற, சான்றுகளற்ற, முற்றிலும் பொய்யான வதந்திகளை பரப்பும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்குப் பகுதி மக்களால் எங்களுக்குக் கிடைக்க இருக்கும் தேர்தல் வெற்றி, தமிழ் மக்களின் உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் எங்கள் வழியில் இருக்கின்றன என்பதை தெளிவாகக் காட்ட இருக்கின்றன
இந்த வெற்றியால், எங்கள் கூட்டணியின் நிலைத்தன்மை மட்டுமல்ல, அதன் நம்பகத்தன்மையும், மக்களோடு நேரடி உறவும் உறுதிப்படுத்தப்படும்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியும், எமது கூட்டமைப்பில் உள்ள அனைத்து உறுப்புக் கட்சிகளும், சட்டத்தின் மேன்மையை முழுமையாக மதிக்கின்றன.
ஐனாயக நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றி, மக்கள் சேவையில் நேர்மை, ஊழல் இல்லாத செயல்பாடுகளை மேற்கொள்வதில் உறுதியுடன் செயல்படுகின்றன.
தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள், சட்ட நடைமுறைகளுக்கேற்ப சீராகவும் நேர்மையாகவும் நடைபெறும் என்பதை எம்மால் நம்பப்படுகின்றது.
இதனூடாக, திரு. சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்கள், மிக விரைவில் மக்கள் சேவையில் மீண்டும் முழுமையாக இணைவார் என்பதை உறுதியுடன் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்கள் நம்பிக்கையையும் வெற்றியையும் பொய்கள் மூலமாகத் தடுப்பது எதையும் சாதிக்க முடியாத முயற்சியே.
உண்மை எப்போதும் வெல்லும்.
மக்களின் நெஞ்சத்தில் உறைந்த உணர்வுகள், எத்தனை வதந்திகளாலும் அழிக்க முடியாது.
நேர்மையும் நம்பிக்கையும் எங்கள் பாதை.
அந்த பாதையில் மக்கள் ஏற்கனவே எங்களை அழைத்துச் செல்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.