எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
போரதீவுப்பற்று பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுர் உற்பத்தி விற்பனையாளர்களின் இரு தினங்களைக் கொண்ட சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வானது பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இன்று (10) பாலையடிவட்டை பொதுச் சந்தை கட்டிடத் தொகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளிதரன் கலந்து கொண்டிருந்ததுடன், விசேட அதிதிகளாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். ராஜ்பாபு, போரதீவுப்பற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் வி. துலாஞ்சனன் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதுடன், நுகர்வோர்களிடம் இருந்து வருகின்ற கேள்விகள் மற்றும் விற்பனை வாய்ப்புகளை சலுகை விலையில் மக்கள் கொள்வனவு செய்வதற்கு இக் கண்காட்சியினால் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் போது பிரதேச செயலக பிரிவின் மண்டூர், பழுகாமம் மற்றும் வெல்லாவெளி வலயங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு அருணலு நுகர்வு கடன் மற்றும் வாழ்வாதார கடன் என்பன வழங்கப்பட்டன.
மேலும், இந்த நிகழ்வினை பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ். ஜெயராஜா, முகாமைத்துவ பணிப்பளார் அ. குககுமாரன், மண்டூர், பழுகாமம், வெல்லாவெளி சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள், சமூக மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள், சமுர்த்தி வர்த்தக சங்கத்தினர், விற்பனையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் .