அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள ஹெல்த் சென்டருக்குச் சொந்தமான வளாகம் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் பூரணமாக நேற்று முன்தினம் சுத்தம் செய்யப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் மற்றும் அரசியல் பேரவையின் உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒவ்வொரு வேலைத்திட்டமும் அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் யாவும் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலயத்துக்கு முன்பாகவும் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் அமைந்திருக்கும் ஹெல்த் சென்டருக்குச் சொந்தமான இவ்வளாகத்தில், பல வருட காலமாக
குப்பைகள் நிரம்பியும் நுளம்புகள் தாக்கம் காரணமாகவும் மற்றும் பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதாலும் இவ்வளவினை சுத்தப்படுத்தித் தருமாறு பிரதேச மக்கள் ஆதம்பாவா எம்.பி.யிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து, கல்முனை மாநகர சபையினால் அவர்களது இயந்திரம் மூலமும் கல்முனை மாநகர சபை ஊழியர்களினால் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு, வளாகம் பூரணமாக சுத்தப்படுத்தப்பட்டது.

நாட்டைச் சுத்தப்படுத்தும் இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் இதற்காக முன்னின்று செயற்பட்டுவரும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா உட்பட இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் பிரதேச மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.