திருகோணமலையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

ஹஸ்பர்_ ஏ.எச்

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண கடற்கரையோரத்தை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று (16) திருகோணமலையில் அமைந்துள்ள மான் பூங்கா கடற்கரை பகுதியில் ( சங்கமித்தா அருகில்) நடைபெற்றது.

இதன்போது பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கிழக்கு மாகாணம் , திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

“அழகிய கடற்கரை மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கிழக்கு மாகாணம் முழுவதும் இவ்வேலைத்திட்டம் இன்று நடைபெற்றது.

வெருகல், மூதூர், கிண்ணியா, பட்டினமும் சூழலும், குச்சவெளி ஆகிய கரையோர பிரதேச செயலக பிரிவுகளில் அமைந்துள்ள 53 கடற்கரை பகுதிகளிலும் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, கிழக்கு மாகாண சபையின் நிறுவனத் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள், இலங்கை காவல்துறை மற்றும் பிற அரசு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.