சங்கே முழங்கு சமூக மேம்பாட்டுக் கழகத்தின் தைத்திருநாள் பண்பாட்டுப் பெருவிழா

சங்கே முழங்கு சமூக மேம்பாட்டுக் கழகத்தின் தைத்திருநாள் பண்பாட்டுப் பெருவிழா 12.02.2025 நேற்று மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

கழக செயற்பாட்டாளர் பி.நீதிதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) ந.வில்வரத்னம் பிரதம அதிதியாகவும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் சி.சுதாகர் மற்றும் மகிழடித்தீவு பிரதேச வைத்திய அதிகாரி வைத்தியர் கி.துலக்ஷி சிறப்பு அதிதியாகவும் கொக்கட்டிச்சோலை பிரதேச சபை செயலாளர் ச.நவநீதன், கலாசார உத்தியோகத்தர் மூ.சிவானந்தராசா கௌரவ அதிதிகளாகவும் ஆலயங்களின் நிருவாகிகள் அழைப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

நெல் அறுவடை செய்து கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலிலிருந்து பண்பாட்டு பவனியாக சென்று மகிழடித்தீவு கலாசார மண்டபத்தை அடைந்து பாரம்பரிய முறைப்படி பொங்கல் பொங்கி வழிபாடும் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் கோலம்போடுதல், தேவாரம் பண்ணோடு பாடுதல், பூமாலை புனைதல், குருத்துப் பின்னுதல், கிராமியப் பாடல் போன்ற பல்வேறு போட்டி நிகழ்வுகளுடன் கண்களுக்கு விருந்தளிக்கும் கலை ஆற்றுகையும் சிறப்புப் பட்டிமன்றமும் இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

அருகிவரும் தமிழர்களின் பாரம்பரிய, பண்பாட்டு விடயங்களை புத்துயிர்பெறச் செய்யும் நோக்கில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.