மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பொங்கல் விழா உன்னிச்சை 8ஆம் கட்டை பாடசாலை மைதானத்தில் இன்று(07) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
பாடசாலையில் இருந்து ஊர்வலம் ஆரம்பாகி உன்னிச்சைக்குளம் வரை சென்று அங்கிருந்து பாடசாலை மைதானத்தினை வந்தடைந்து நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. ஊர்வலத்தில் தமிழர் பாரம்பரிய நடனங்கள் மாணவர்களினால் நிகழ்த்துகை செய்யப்பட்டன. மேலும் மாட்டுவண்டி மற்றும் உழவு இயந்திரங்களும் ஊர்வலத்தில் ஈடுபட்டன. உழவு இயந்திரங்களில் கோட்டை, முக்காலி, சூடு போன்றனவும், உழவுக்காக பயன்படுத்தப்படும் கலப்பைகளும் காட்சிப்பொருள்களாக அலங்கரிக்கப்பட்டிருந்தன.
புதிதெடுத்தல், அவற்றினை நெல்லாக்குதல், நெல்லினை அரிசியாக்குதல், அவற்றினைக் கொண்டு பொங்கல் பொங்குதல் போன்ற பாரம்பரியமான செயற்பாடுகளும் நடைபெற்றன. மேலும், தமிழர்கள் பாரம்பரியமாக பயன்படுத்திய பொருட்களும் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
பொங்கல் பானைகளில் பொங்கல் பொங்கப்பட்டு, பூசை வழிபாடுகளும் இடம்பெற்றன. மேலும் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
வலயக்கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பிரதம அதிதியாக ஓய்வுநிலை வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், சிறப்பு அதிதியாக கூத்துக்கலைஞர் மு.கார்த்திக்கேசு, கௌரவ அதிதிகளாக இவ்வருடம் ஓய்வுபெறவுள்ள அதிபர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், வலய பதவிநிலை உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, வலயத்தில் கடமையாற்றும் இவ்வருடம் ஓய்வுபெறவுள்ள அதிபர்களும், சிறப்பு அதிதியும், பிரதம அதிதியும் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வினை வலயக்கல்வி அலுவலகத்துடன் இணைந்து உன்னிச்சை 8ம் கட்டை பாடசாலை சமூகமும் இணைந்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வலயமட்ட பொங்கல் விழா எல்லைப்புறத்தில் உள்ள பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.