மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் உள்ளூர் போக்குவரத்து பாதிப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (19) காலை 9.30 மணியிலிருந்து கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வெள்ள நீர் அதிகரித்து வருவதனால் உள்ளூர் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில்  பிரதான கால்வாய்கள், ஆறுகள், மற்றும் தாழ்நில பிரதேசங்களில் போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர்  பிரிவில்   புலிபாஞ்சகல் கோஸ்வே மற்றும் கிண்ணயடி தொடக்கம் பிரம்படித்தீவு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதனால்  இரண்டு படகுசேவைகளை  மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு படகுப் போக்குவரத்து இடம்பெற்று வருகின்றது.

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில்  ஈரலக்குளம் மற்றும் மயிலவெட்டுவான் பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் சித்தாண்டி தொடக்கம் பெருமாவெளி போக்குவரத்துக்கு  இடையூறு ஏற்பட்டுள்ளதால் அங்கும் இரண்டு படகுசேவைகள்  ஏறாவூர் பற்று பிரதேர செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதியில் நீர்  ஊடருத்து செல்வதனால் உழவு இயந்திர சேவை  இடம்பெற்று வருகின்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவினில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  நாவற்குடா கிழக்கு கிராம சேவகர் பிரிவினில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 3 2 நபர்கள் மெதடிஸ்த பாலர் பாடசாலை இடைத்தங்கள் முகாமில் தக்கியுள்ளதாக   மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளதுடன் இந் நிலையமானது அரசாங்க அதிபரின் உறிவுருத்தலுக்கு அமைவாக 24 மணி நேரம் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.