கரடியனாறு வைத்தியசாலை: கொல்லப்படும் மருத்துவமனைகளும் உண்மைகளும்.

கரடியனாறு வைத்தியசாலையில் 6 மாத குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குழந்தையின் குடும்பத்தினர், வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்தே குழந்தையின் மரணத்திற்கு காரணம் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால், வைத்தியசாலை நிர்வாகம் வேறு காரணங்களை முன்வைக்கிறது. அவர்களின் கூற்றுப்படி,சம்பவத்தன்று பிற்பகல், குழந்தை கடுமையான காய்ச்சலுடன் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டது. கடமையில் இருந்த வைத்தியர், குழந்தையை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றி கண்காணிப்பில் வைத்திருந்து சிகிகச்சையளிக்க பரிந்துரைத்தார். ஆனால், பெற்றோர் தைப்பொங்கல் பண்டிகை காரணமாக இதற்கு மறுப்பு தெரிவித்து, குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் இரவு வேளை குழந்தையின் உயிர் பிரிந்த பின்னரே வைத்தியசாலைக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது.

அதேவேளை காச்சலானது குழந்தைக்கு சிலநாட்களாக இருந்தாகவும் சம்பவ தினத்திற்கு முன்தினம் ஏறாவூர் மற்றும் ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த தகவலையும் பெற்றோர் தெரிவித்திருந்தனர்.

அந்த நாளில், குழந்தைக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததால் தாய்ப்பால் குடிக்க மறுத்தது. எனவே, குடும்பத்தினர் குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்தனர். ஆனால், பால் குடித்த பிறகு குழந்தை மூச்சுவிடுவதில் சிரமம் அடைந்தது. இந்த நிலையில்,

குழந்தையின் அம்மா அல்லது அப்பா அல்லாமல், அயலில் வசிக்கும் ஒரு பெண்மணி குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தார். எனவும் குழந்தையை மருத்துவமனையில் அனுமதிப்பது குறித்து குழந்தையின் பெற்றோர்கள் இருவரும் ஒரே கருத்தில் இல்லை என்பது கிராம மக்களிடம் இருந்து தெரியவந்துள்ளது.

இதனால், குழந்தையை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கக்கூடிய சந்தர்பங்களும் இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், குழந்தையின் மரணத்திற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. குழந்தையின் உடற்கூற்று அறிக்கை மிகமுக்கியமானது, அவ் அறிக்கை மற்றும் குடும்பத்தினரின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு, விரிவான விசாணைகள் மேற்கொள்ளப்டும் எனவும் குற்றமிழைக்கப்பட்டிருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் பரவும் காணொளிகள் மக்கள் மத்தியில் மருத்துவர்கள் மீதான நம்பிக்கையைக் குறைத்து, அவர்களின் பணியை கேள்விக்குறியாக்குகின்றன. இது போன்ற சம்பவங்கள் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி, வைத்தியசாலைகளுக்கு எதிரான உணர்வுகளை வளர்க்கலாம். இதனால், மருத்துவ சேவைகளின் தரம் பாதிக்கப்பட்டு, பொதுமக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, ஒரு காணொளியின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, தவறான தகவல்களை பரவ விடாமல் தடுக்க வேண்டும். உண்மையான தகவல்களை பகிர்ந்து, சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பகுதியான கரடியனாறில், இயற்கைச் சீற்றங்கள் மற்றும் காட்டுயானைத் தாக்குதல்கள் போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு, வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறை இருந்தபோதிலும், இந்த வைத்தியசாலை தனது சேவையைத் தொடர்ந்து அர்பணிப்புடன் வழங்கி வருகிறது.

பிரதேச வைத்தியசாலையாக காணப்படும் இவ்வைத்திசாலையினை, இந்தப் பிரதேசத்தின் முழுமையான சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், ஒரு ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படுவதற்கான இதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்பது இங்கு நாம் கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்