பெரியநீலாவணையில் மூடப்பட்டுள்ள மதுபான சாலையை திறக்கக்கோரி மதுப் பிரியர்கள் கோரிக்கை;

கல்முனை வடக்கு பிரதேச செயலாளரிடம் மகஜர்!

பெரியநீலாவணையில் கடந்த வருடம் மூடப்பட்ட கேகோள் பெவரேஜஸ் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மதுச்சாலையை திறக்க கோரி மகஜர் ஒன்று கல்முனை வடக்கு பிரதேச செயலாளரிடம் இன்று (17) கையளிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்ட மதுப் பிரியர்கள் கையொப்பமிட்டுள்ள இந்த மகஜரை இருபதுக்கும் மேற்பட்டோர் நேரில் சென்று பிரதேச செயலாளரிடம் கையளித்திருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு முந்திய வாரத்தில் அனுமதி வழங்கப்பட்ட குறிப்பிட்ட மதுபான சாலைக்கு முன்பாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 23 ம் திகதி  இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கல்முனை வடக்கு பிரதேச செயலாளரினால் அது தற்காலிகமாக மூடப்பட்டது.

புதிய அனுர அரசாங்கம் பொருத்தமற்ற, கடந்த அரசாங்கத்தின் இறுதிக் காலத்தில் வழங்கப்பட்ட மதுபான சாலைகளுக்குரிய உரிமங்கள் இரத்து செய்யப்படும் என்கின்ற அடிப்படையில் ஆர்ப்பாட்டம் மற்றும் குறிப்பிட்ட மதுபான சாலை பொருத்தமிட்ட இடத்தில் அமைய பெற்றுள்ளமை தொடர்பாக பொது அமைப்புக்களால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

ஜனாதிபதி செயலகமும் அமைப்புகளின் கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்படி PS/PRD/PG/12/01/679392 ம் இலக்க 2024.10.22 திகதிய கடிதம் மூலம் கலால் திணைக்களத்தை அறிவுறுத்தி இருந்தது. இருந்த போதும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத கலால் திணைக்களம் 2025 ம் ஆண்டின் பகுதி அளவான காலத்திற்கு அனுமதி பத்திரத்தை குறிப்பிட்ட நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

கலால் திணைக்களத்தின் பொறுப்பற்ற செயல் தொடர்பாக பொது அமைப்புகளால் மீண்டும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இன்றைய மகஜர் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.