நாயால் பாடசலை மாணவனுக்கு நிகழ்ந்த சோகம்!

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியின் ராஜாங்கனை சந்திக்கு அருகில் நேற்று முன்தினம் (05) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிலாபம் – வெலிகேன பகுதியைச் சேர்ந்த செவான் மலீச (வயது 12) எனும் மாணவனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதுவதை தவிர்க்க முற்பட்ட போது, அது விபத்துக்குள்ளாகி வீதியின் நடுவே கவிழ்ந்து எதிரே வந்த பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்தின் போது, முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் பின்பக்கமாக இருந்து பயணித்த நபர் உட்பட பாடசாலை மாணவன் ஆகிய இருவரும் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், குறித்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி , நொச்சியாகம வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ராஜாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.