மன்னார் மறைமாவட்டத்தில் இருநூறு வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் பேசாலை பகுதியில் அப்பகுதி மக்களின் பாதுகாவலியாக கோயில் கொண்டு இருக்கும் புனித வெற்றி அன்னையானவள் வருடத்தில் ஒருமுறை சிம்மாசனத்தில் இருந்து இறக்கப்பட்டு மக்களுக்கும் இக்கிராமத்துக்கும் ஆசீர்வதிக்கும் ஒருநாளாக வருடப் பிறப்புக்கு அடுத்துவரும் ஞாயிற்றுக் கிழமை பேசாலை மக்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுவது முன்னோர் காலத்தில் இருந்து கொண்டாடப்பட்டு வரும் ஒரு பெரு விழாவாகும்.
அகில உலக திரு அவையானது இந்நாளை மூவியரசர் திவ்விய பாலனை தரிசித்த அதாவது திருக்காட்சி விழாவாக கொண்டாடுகின்றது.
இந்த வகையில் பேசாலை பதியானது முன்னோர் காலத்திலிருந்து மூவியரசர் பட்டினம் என்ற பெயர் சூட்டப்பட்ட ஒரு பதியாக இன்றும் திகழ்ந்து வருகின்றமையால்.
இந்த வகையில் இவ்வாழ் பேசாலை கத்தோலிக்க மக்கள் இந்நாளை ஞாயிற்றுக்கிழமை (05.01) தங்கள் பகுதியில் ஏனைய திருவிழாக்களைவிட இவ்விழாவை மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
காலை பெருவிழா திருப்பலி முடிவுற்றதும் காலை 10 மணியளவில் சிம்மாசனத்தில் வீற்றியிருக்கும் புதுமைமிக்க புனித வெற்றி அன்னை செப வழிபாட்டுடன் சிம்மாசனத்திலிருந்து இறக்கப்பட்டு அன்னையின் கரங்களில் இருக்கும் குழந்தை இயேசுவை பெற்று குழந்தை பாக்கியம் அற்ற குடும்பத்தினர் அருட்பணியாளரிடமிருந்து தங்கள் கரங்களில் அந்த குழந்தை இயேசுவை பெற்று முத்தம் செய்து ஆசீர் பெற்று செல்லும் திருச்சடங்கு இடம்பெறுவது வழமையாகும்.
இதனால் இந்நாளில் இத்திருச் சடங்கில் விசுவாசத்துடன் கலந்து கொண்டு வருடந்தோறும் ஆசீர் பெற்றவர்கள் பலர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புனித நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (05.01) பேசாலை புனித வெற்றி அன்னை ஆலயத்தில் பங்குத் தந்தை அருட்பணி சத்தியராஜ் அடிகளாரின் தலைமையில் நடைபெற்றபோது உள்ளுர் மக்களுடன் அதிகமான வெளியூர் மக்களும் கலந்து ஆசீர்பெற்று சென்றததையும் காணக்கூடியதாக இருந்தது.
(வாஸ் கூஞ்ஞ)