2025 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் (03) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

2024ஆம் ஆண்டு ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம், கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், 2025 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆளுநர் கலந்துரையாடினார்.

இங்கு உரையாற்றிய ஆளுநர், 2024 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் ஆட்சேர்ப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், இம்மாதத்தின் பிற்பகுதியில் பணிநியமனம் வழங்கப்படும் எனவும், 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் நியமனத்திற்கான அடிப்படைப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

இது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளை பரிசீலித்து நியாயமான முறையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்த அவர், ஆட்சேர்ப்பு செயல்முறை மிகவும் சிக்கலானது என்றும், ஆட்சேர்ப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் கூடிய விரைவில் செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.