புதிய அரசாங்கத்தின் முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் இன்று (24) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆரம்பமானது.

திருகோணமலை மாவட்டத்தில் காணிப்பிரச்சினைகள் தொடர்பான விடயங்கள், பல்வேறு காரணங்களால் நிலுவையில் உள்ள திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிலம் குறித்து பின்தொடர்தல் தொடர்பான விடயங்கள், மாவட்டத்திலுள்ள பாதைகள் மற்றும் பாலம் தொடர்பான திட்டங்கள், மின்சார சபை எதிர்நோக்கும் பிரச்சினைகள், காட்டு யானை அச்சுறுத்தல் மற்றும் பிற விவசாய பிரச்சினைகள் தொடர்பான விடயங்கள், மீன்பிடித்தொழில் தொடர்பான பிரச்சினைகள், அனர்த்த முகாமை தொடர்பான விடயங்கள், மாவட்டத்தில் தற்போதுள்ள கல்விச் சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்குதல், மாவட்ட நீர்பாசனத் திட்டம் போன்ற பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர் அக்மீமன கமகே ரொஷான் பிரியசஞ்சன, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச உயரதிகாரிகள் மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.