இலங்கையின் தமிழர் பிரச்சினையில் உண்மையான நிலவரத்தை புரிந்து கொள்ளல்

மீரா ஶ்ரீனிவாசன்

இலங்கையில் பலர் தங்களது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தை உன்னிப்பாக அவதானித்தனர். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவும் பிரதமர் நரேந்திர மோடியும் அவருக்கு அளித்த சம்பிரதாயபூர்வமான செங்கம்பள வரவேற்பு, அவர் கலந்துகொண்ட நிகழ்வுகள், பேச்சுவார்த்தைகள், முக்கியமாக இரு அரசாங்கங்களினாலும் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை எல்லாம் உள்நாட்டு ஊடகங்களின் பெருமளவு கவனத்தை ஈர்த்தன.இந்த வருடம் செப்டெம்பரில் திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையும் பிறகு நவம்பரில் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பிரமிக்கத்தக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியை பெற்றதையும் அடுத்து அவர் வெளிநாட்டுக்கு மேற்கொண்ட முதலாவது அரசு முறை விஜயம் இதுவாகும். இந்தியா இலங்கையின் மிகவும் பலம்பொருந்திய ஜனாதிபதிகளில் ஒருவரை மாத்திரமல்ல, ஒரு காலத்தில் இந்தியா வையும் இலங்கையில் அது செய்ததாக கருதப்பட்ட ” தலையீட்டையும் ” கடுமையாக எதிர்த்த ஒரு கட்சியின் ( ஜனதா விமுக்தி பெரமுன ஜே.வி.பி.) இடதுசாரித் தலைவரையும் வரவேற்றது. இந்தியாவிலும் இலங்கையிலும் இந்திய – இலங்கை உறவுகளிலும் உண்மையில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. தற்போது இருப்பது முன்னைய ஜே.வி.பி. அல்ல என்பதை அரச அதிகாரத்துக்கான அதன் எழுச்சி வெளிக்காட்டுகிறது. இலங்கையும் முன்னரைப் போன்று இல்லை. இரு வருடங்களுக்கு முன்னர் பலரும் கற்பனை செய்து பார்த்திருக்காத அளவுக்கு அதன் அரசியல் நிலக்காட்சியும் பெரியளவில் மாற்றமடைந்துவிட்டது.

ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்டமான வெற்றியை அதுவும் குறிப்பாக நாட்டின் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் சிறுபான்மைச் சமூகங்கள் வாழ்கின்ற வடக்கு, கிழக்கிலும் மலைநாட்டிலும் அந்த கட்சி பெற்ற வெற்றியை ஆய்வாளர்கள் இன்னமும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. அயல்நாடுகளில் சீனாவின் செல்வாக்கு வளராமல் தடுப்பதில் புதுடில்லி மூழ்கியிருக்கும் நிலையில், இந்தியாவின் முன்னுரிமைக்குரிய விவகாரங்களிலும் கூட குறிப்பிடத்தக்க நகர்வு ஏற்பட்டுவிட்டது.

மாறிவரும் இந்திய நலன்கள்

மற்றைய எல்லாமே மாறிவருகின்ற அதேவேளை, கொழும்பில் பதவியிலிருந்த கடந்தகால அரசாங்கங்கள் முழுநிறைவான அரசியல் இணக்கத் தீர்வொன்றை வழங்கத் தவறிய நிலையில், இலங்கையின் நீண்டகால தேசிய இனப்பிரச்சினை மாறாமல் அப்படியே இருக்கிறது. இலங்கையில் பலரைப் பொறுத்தவரை தமிழர் உரிமைகளின் நடுவர் என்று கருதப்படுகின்ற இந்தியாவின் ஈடுபாடு அதன் செல்வாக்கு காரணமாக 2009ஆம் ஆண்டிலிருந்து போரின் முடிவுக்கு பின்னரான வருடங்கள் உட்பட மிகவும் அண்மைய தசாப்தங்களில் பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியது. காலஞ்சென்ற தமிழ்த் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் 2022 ஆம் ஆண்டில் ‘ தி இந்து’ வுக்கு 11 வழங்கிய நேர்காணல் ஒன்றில் ” 1987 இந்திய- இலங்கை சமாதான உடன்படிக்கையை அடுத்து இலங்கை அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதில் இந்தியாவுக்கு ஒரு விசேட கடமை ` இருக்கிறது ” என்று குறிப்பிட்டார். ஆனால் இந்தியாவின் நலன்கள் இன்று வேறுபட்டவையாக இருக்கின்றன என்பது வெளிப் படையானது.

2020 டிசம்பர் 16ஆம் திகதி புதுடில்லியும் கொழும்பும் வெளியிட்ட கூட்டறிக்கை தற்போதைய யதார்த்த நிலையை புரிந்துகொள்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதாக அமைகிறது. ‘பொதுவான ஒரு எதிர்காலத்துக்கான கூட்டுப்பங்காண் மையை பேணிவளர்த்தல்’ ( Fostering partnership for a shared future ) என்ற தலைப்பிலான அந்த கூட்டறிக்கை அரசியல், பொருளாதாரம் மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு என்று பல்வேறு விவகாரங் களை தழுவியதாக அமைந்திருக்கின்ற போதிலும், காணப்பட வேண்டியிருக்கும் அரசியல் தீர்வு அல்லது போரின் முடிவுக்கு பின்னரான நல்லிணக்கம் அல்வது தமிழர்களின் அபிலாஷைகள் தொடர்பில் எதையுமே குறிப்பிடவில்லை.

ஆனால் இலங்கை ஜனாதிபதியுடன் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் மாநாட்டில் மோடி இலங்கை அரசாங்கம் தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என்று நாம் நம்புகிறோம். இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் மாகாணசபை தேர்தல் களை நடத்துவதில் தங்களுக்கு இருக்கும் கடப்பாட்டையும் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்றும் நம்புகிறோம்” என்று கூறினார். 13 ஆவது திருத்தம் தொடர்பில் அவர் எதையும் குறிப்பிடவில்லை.

ஜனாதிபதி திசாநாயக்க பிரச்சினைக்கு வித்தியாசமான முறையில் வடிவம் கொடுத்தார். ” வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று சகல மாகாணங்களையும் சேர்ந்த பல்வேறு சமூகங்களும் எமக்கு கிடைத்த ஆணைக்கு பங்களிப்பு செய்தார்கள். எனது மக்களினால் அத்தகைய ஒரு முக்கியமான பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒரு தலைவர் என்ற வகையில் ஜனநாயகத்தின் சாராம்சம் என்பது பல்வேறுபட்ட அரசியல் கருத்துக்கள் மற்றும் குழுக்களின் சகவாழ்விலேயே தங்கியிருக்கிறது என் பதை நான் தெளிவாக விளங்கிக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

மாகாணசபை தேர்தல்களை (தற்போது ஐந்து வருடங்களாக செயலிழந்து கிடக்கின்றன) நடத்துவதாகவும் பரந்தளவிலான பொதுக் கலந்தாலோசனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டு வருவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்டது. ஜனாதிபதி திசாநாயக்கவும்கூட பல தடவைகள் இந்த வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் அவரது அரசாங்கம் நிலைபேறான அரசியல் தீர்வொன்றுக்கான அதன் சொந்த நோக்கை இன்னமும் வெளியிடவில்லை.

தேசிய மக்கள் சக்தி 13ஆவது திருத்தத்தினை மொழிநடையில் பேசுவதை உறுதியாக தவிர்த்திருக்கிறது. அந்த திருத்தம் இந்தியாவினால் ” திணிக்கப்பட்டதாகவே ” இன்றுவரை சிங்கள பௌத்த பெரும்பான்மையினர் கருதுகிறார்கள். அதைப் பற்றி பேசினால் ஜே.வி.பி.யின் ஆதரவாளர்களுக்கு அசௌகரியமாக இருக்கும். இந்தியாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ” அதிகாரப் பரவலாக்கல் உரையாடலையும்” ( Devolution  discourse) ஐக்கிய நாடுகளின் அமைப்புக்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு உரிமைகள் குழுக்களினால் ஊக்குவிக்கப்படும் முரண்நிலை தீர்வு, நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதலுக்கான ” தாராள போக்குடைய சமாதான உரையாடலையும் (Liberal peace discourse) மக்கள் சக்தி தவிர்த்து ஒதுக்குகிறது என்று இலங்கையின் அரசறிவியல் நிபுணரான 11 பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட ” அதிகாரத்தில் தேசிய மக்கள் சக்தி ; குடியியல் தேசாயவாதத்தின் ஊடாக போருக்கு பின்னரான நல்லிணக்கத்துக்கான  வாய்ப்புக்கள் ” (NPP in Power; Possibilities for Post War Reconciliation through Civic Nationalism ) தலைப்பில் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

தேசிய மக்கள் சக்தி இலங்கையில் இனங்களுக்கு இடையிலான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான அதன் நிகழ்ச்சித்திட்டம் தோல்வி கண்டவையாக அது கருதுகின்ற கடந்த கால முயற்சிகளின் ஒரு தொடர்ச்சியாக பார்க்கப்படுவதை விரும்பவில்லை என்று தோன்றுகிறது” என்று பேராசிரியர் உயன்கொட எழுதியிருக்கிறார்.

சர்ச்சைக்குரிய திருத்தம் சர்ச்சைக்குரியதாக விளங்கும் அரசியலமைப் புக்கான 13 ஆவது திருத்தம் இலங்கையர்கள் மத்தியில் தொடர்ச்சியாக கலப்பான உணர்வு களை பெரும்பாலும் கடுமையான எதிர்வினையை கிளப்பி வருகிறது. தமிழர்கள் மத்தியிலும்கூட அந்த திருத்தம் அவசியமான ஒன்று. ஆனால் போதுமான அதிகாரப் பரவலாக்கல்  ஏற்பாடுகளை கொண் டதாக இல்லை என்றும் அல்லது சமஷ்டி முறையின் அடிப்படையிலான அரசியல் தீர் வொன்றுக்கானவரலாற்று ரீதியான கோரிக்கையை கீழ்ப்படுத்துகின்ற பிரச்சினைக்குரிய ஒரு சட்டம் என்றும் பிளவுபட்ட கருத் துக்களே இருக்கின்றன.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான அரசாங்க காலத்தில் (2015 -19) புதிய அரசியலமைப்பு ஒன்றை வரை வதற்கான செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்டபோது 13 ஆவது திருத்தம் மீது கவனம் குவிந்திருக்கவில்லை. அந்த செயன்முறை தோல்விகண்டது. ஆனால் அதை தொடர்ந்து முன்னெடுத்து பூரணப்படுத்தப்படுத்தப்போவதாக திசாநாயக்க கூறியிருக்கிறார்.

கடந்த காலத்தின் இரு பிரதான செயன்முறைகளும் தமிழ் மக்களுக்கு பயன்தரவில்லை என்பது உண்மையே. ஆனால் பேராசிரியர் உயன்கொட சுட்டிக்காட்டும் இரு உரையாடல்களில் எந்த ஒன்றையும் பயன்படுத்துவதில் ஜே.வி.பி. முன்னெச்சரிக்கையாக இருக்கக்கூடியதற்கான காரணத்தை விளங்கிக்கொள்வதும் கஷ்டமானதல்ல. ஆனால், தேசிய மக்கள் சக்தியின் பெரிய வெற்றிக்கு கணிசமானளவுக்கு பங்களிப்புச் செய்த தமிழ் மக்கள் தங்களுக்காக அரசாங்கம் மனதில் கொண்டிருக்கும் திட்டம் எதுவென்று விளக்கத்தைக் கோருவதில் நியாயம் இருக்கிறது.

உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னர் பதினைந்து வருடங்களுக்கும் கூடுதலான காலம் கடந்துவிட்ட நிலையிலும், பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்ட தங்களது உறவினர்களுக்கு உண்மையில் நடந்தது என்ன என்று தமிழ் மக்கள் இன்னமும் உண்மையை அறிய முடியாமல் இருக்கிறது. இராணுவத்தின் வசமிருக்கும் தங்களது காணிகளை மீளப்பெறுவதற்கு அவர்கள் தொடர்ந்து போராடவேண்டியிருக்கிறது.

அழிவும் உயிரிழப்புக்களும் நிறைந்த அந்த கொடூரமான வருடங்களில் சிதைந்துபோன தங்க ளது வாழ்வாதாரங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவர்கள் இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அழிவைத்தந்த போரினால் பெரும் பின் னடைவுக்கு உள்ளான தங்களது மாகாணங்களை எவ்வாறு புனர்நிர்மாணம் செய்வது என்பதை தீர்மா னிப்பதில் தங்களுக்கு ஒரு வகிபாகம் இல்லாதவர்க ளாகவே தமிழர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

தேசிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது அல்லது ஐக்கியப்பட்ட இலங்கையர் என்ற அடையா ளத்தை உருவாக்குவது என்ற அரசாங்கத்தின் – உறுதிமொழியை போர்க்கால பொறுப்புக்கூறல், வடக்கு, கிழக்கில் அர்த்தபுஷ்டியான அபிவிருத்தி, அரசியல் கட்டமைப்பு ஆகியவற்றைக் கையாளுவதற்கு அரசாங்கத்திடம் இருக்கக்கூடிய விசேட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுமாத்திரமே மதிப்பிடமுடியும். புதியதொரு அரசியல் ஒழுங்கு நாட்டில் இன்று முக்கியமான விடயமாக நோக்கப்படலாம். ஆனால் பழைய பிரச்சினைகள் இல்லாமற்போகப் போவதில்லையே.

அண்மைய தேர்தல்கள் ஜனாதிபதி திசாநாயக் கவுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் மிகவும் அரி தான உத்வேகத்தையும் முன்னென்றும் இல்லாத வகையிலான பாராளுமன்ற செல்வாக்கையும் கொடுத்திருக்கின்றன. : போருக்கு பின்னரான காலப்பகுதியில் மக்களின் வாழ்க்கை யதார்த்தங் களை கருத்தில் எடுத்து அரசியல் தீர்வு குறித்து புதி தாகச் சிந்திப்பதற்கு அரசாங்கத்துக்கு இப்போது உண்மையான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தமிழ் அரசியல் சமுதாயத்தின் நிலை

அதேவேளை இலங்கையின் தமிழ் அரசியல் சமுதாயமும் ஒரு பெரிய சவாலை எதிர்நோக்குகிறது. அண்மைய தேர்தல்களில் வாக்காளர்கள் பிராந்திய தமிழ் கட்சிகளுக்கு தெளிவான செய்தியை (வடக்கு, கிழக்கில் ஒரு மாவட்டத்தை தவிர ஏனைய சகல மாவட்டங்களிலும் தமிழ் கட்சிகளை தேசிய மக்கள் சக்தி தோற்கடித்தது) கொடுத்த பிறகு தமிழ் அரசியல் சமுதாயம் அதன் செல்வாக்கை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறது.

தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக சர்வதேச சமூகத்தையே எதிர்பார்த்து பழக்கப்பட்டுவிட்ட பிறகு தமிழ் அரசியல் தலைமைத்துவம் இப்போது அதன் சொந்த தோல்விகளுக்கு முகங்கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவை நம்பியிருப்பவர்கள் தமிழர் பிரச்சினை இனிமேலும் புதுடில்லிக்கு இனிமேலும் இராஜதந்திர ரீதியான செல்வாக்கை தரக்கூடிய அல்லது இந்தியாவில் நெருக்குதலைக் கொடுக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இல்லை என்பதை புரிந்து கொள்வது நல்லது. தமிழர் பிரச்சினை மீது இந்தியாவின் நலனும் செல்வாக்கும் தேய்ந்து கொண்டுபோகிறது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. தவிரவும், சிறுபான்மைச் சமூகங்களை நன்றாக நடத்துமாறு இன்னொரு நாட்டைக் கேட்பதற்கான எந்த தார்மீகத் தகுதியும் இந்தியாவுக்கு இருக்கிறதா என்று அவர்கள் கேட்கவேண்டும்.

மேற்குலக வல்லாதிக்க நாடுகளின் ஆதிக்கத்தில் இருக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்புகள், இந்தியா மற்றும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துடன் சேர்ந்து செயற்பாடுகளை முன்னெடுக்கும் தமிழ் அரசியல் சமுதாயத்தின் பிரதான தந்திரோபாயம் களத்தில் கணிசமான முன்னேற்றத்தை கொண்டுவரவில்லை. தமிழ் அரசியல் சமுதாயம் தொடர்ந்தும் பொருத்தமானதாக இருப்பதற்கும் நம்பகத்தன்மையை மீளக்கட்டியெழுப்புவதற்கும் அது பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகின்ற மக்களை மையப்படுத்திய அரசியலை முன்னெடுப்பதை தவிர வேறு தெரிவு கிடையாது. எங்கெல்லாமோ இருக்கிற சக்திகளுடன் பேசுவதில் வருடக்கணக்காக மூழ்கியிருந்த தங்களது தலைவர்கள் இப்போது தாங்கள் சொல்வதை கேட்கவேண்டும் என்பதை இலங்கை தமிழ்மக்கள் நினைவுபடுத்தியிருக்கிறார்கள்.

(நன்றி – தி இந்து)