எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம் எனும் நோக்கில் சுவிசில் பொருளாதார கட்டமைப்பு தோற்றம் பெற்றது.

இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் நோக்கில் சுவிஸ்நாட்டில் வசிக்கும் தமிழ் வர்த்தகர்கள் சமூக ஆர்வலர்களால் எதிர்காலத்திற்காக ஒன்றினைவோம் (Unity For Future) எனும்  நோக்கில் சமுககட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சமூக செயற்பாட்டாளர் சி.பிரபாகரனின் ஒருங்கமைப்பில்  சூரிச் மாநிலத்தில் கில்டன் கார்டன் இன்னில் ( Hilton Garden Inn) மூத்த ஊடகவியலாளர் ஞா.குகநாதன் தலைமையில் நடைபெற்ற அங்குராப்பணநிகழ்வில் சுவிஸ்நாட்டிலுள்ள தமிழ் வர்த்தகர்களும் சமுக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

 மக்களின்  பொருளாதாரத்தை மேம்படுத்தல் , வடக்கு கிழக்குப்பகுதிகளில் முதலீடுகளை மேற்கொள்ளல், சுவிஸ் அரசாங்கத்தின் அங்கிகாரம் பெறல் போன்ற விடயங்களும் ஆராயப்பட்டன.

இலங்கையிலிருந்து சமூக ஆர்வலர் எஸ். செல்வின்  Zoom  தொழில் நுட்பத்தின் ஊடாக இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலமைகளையும், அரசியல் நிலவரங்களையும் ,எவ்வாறான முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்பதையும் எடுத்துரைத்தார்.

நிகழ்வில் பல்வேறு கலந்துரையாடல்களின் பின் அமைப்பு ஒன்றினை உருவாக்குவது எனவும் கட்டமைப்பிற்கான பெயரை காலப்போக்கில் தீர்மானிப்பதுடன், சட்டத்தரணிகளின் ஆலோசனைகளுடன் யாப்பினை உருவாக்குவதுடன் கட்டமைப்புக்குள் இளையோர்களையும் உள்வாங்கி அவர்களுக்கு பொருத்தமான பொறுப்புக்களை வழங்குவது எனவும் தீர்மானிக்கபட்டது.

அமைப்பின் தலைவராக இளையதம்பி சிறிதாஸ், செயலாளராக இராசமாணிக்கம் ரவிந்திரன், உட்பட நிருவாககுழு உறுப்பினர்களும், போசகராக ஊடகவியலாளர் ஞானசுந்தரம் குகநாதன் ,ஒருங்கினைப்பாளராக சி.பிரபாகரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.