மாவடிப்பள்ளி வெள்ள அனர்த்தத்தில் மரணித்த மதரஸா மாணவர்களது விபத்தினை தடுப்பதற்கு முன்னாயத்தம் மற்றும் தமது சட்டக்கடமையை முறையாக மேற்கொள்ளாத தகுதிவாய்ந்த அரச அதிகாரிகளுக்கு எதிராக முதலாவது வழக்கு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரீ. கருணாகரன் முன்னிலையில் ஆதரிப்பதற்காக அழைக்கப்பட்டது.
மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற கோர அனர்த்தத்தின் போது தகுவாய்ந்த அதிகாரிகள் இவ்வனர்த்தத்தினை தடுக்க சட்ட ரீதியில் தத்துவமிருந்தும் தோதான கருமங்களை மேற்கொள்ளவில்லை என்ற அடிப்படையில் வழக்கு குற்றவியல் நடபடிமுறை கோவையின் பிரிவு 136(1)(அ) பிரகாரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
உழவு இயந்திரம் தடம் புரண்டதில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரணித்தவரது சார்பாக தரப்பினர் நீதிமன்றில் முன்னிலையாகிய நிலையில் வழக்கின் முறைப்பாட்டாளர் நீதிமன்றத்தினால் பரீட்சிக்கப்பட்டு அவர்களுடைய சாட்சியம் சட்டத்தரணிகளால் நெறிப்படுத்தப்பட்டு, பதிவு செய்யப்பட்டு, பின்னர் நீதிபதி முறைப்பாட்டாளரிடம் பல வினாக்களை வினவி தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை கொண்டு நடத்துவது தொடர்பாக ஆராய்ந்து தன்னுடைய கட்டளை ஒன்றை வழங்குவதற்காக 2025.01.17ஆம் திகதி வழக்கு அழைப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கினை விசாரிப்பதற்காக இவ்விடயம் தொடர்பாக மன்றில் முறைப்பாட்டாளர் சார்பாக ஆஜரான அக்கரைப்பற்று சட்டத்தரணி சப்ராஸ் ஷரீபுடன் சட்டத்தரணி குபேந்திரராஜா ஜெகசுதன், சட்டத்தரணி எம்.எம்.எம்.ஏ. சுயாயிர் ஆகியோர் முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜராகி இருந்தனர்.
குறித்த விடயம் ஒரு பொதுப்பிரச்சினை என்பதாலும், அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்கினாலும், சட்டங்களை முறையாக பின்பற்ற தவறியமையினாலும் நிகழ்ந்த ஒரு பாரியதொரு அனர்த்தமென்பதாலும் இந்த வழக்குக்காக சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தினுடைய சிரேஷ்ட சட்டத்தரணிகள் நஸீல் மற்றும் அன்வர் சியாத், ஷாமிலா உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் குறித்த வழக்கினை சட்டத்தரணிகளோடு சேர்ந்து வழக்கிற்கு தெரிபட்டு தங்களுடைய பூரண ஆதரவினை வெளிப்படுத்தி இருந்தனர்.
அந்த அடிப்படையில் ஒரு பொதுப்பிரச்சினை ஒன்றிற்காக இந்த வழக்கிற்கு தெரிபட்ட சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு
நன்றிகளை முறைப்பாட்டாளர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துக்கொள்கின்றனர்.
இந்த வழக்கினை கொண்டு செல்வதற்கு முழு உறுதுணையாக பயணித்த முறைப்பாட்டாளர், தானாக முன்வந்து இனிமேல் எந்த ஒரு பொது மகனுக்கும் இவ்வாறான அசம்பாவிதங்கள் எதிர்காலத்தில் நடந்து விடக்கூடாது என்ற ஒரு பரந்துபட்ட சிந்தனையோடு நீதிமன்றில் முன்னிலையாகி சட்டத்தரணிகள் மூலமாக விண்ணப்பமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
அரசு அதிகாரிகளின் கவனயீனத்தால் ஏற்பட்ட ஓர் அசம்பாவிதமே இந்த மரணத்துக்கான காரணம் என்று நீதவானுக்கு சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர். ஆகவே, இந்த வழக்கானது முறைப்பாட்டாளர் சார்பாக எந்த விதமான கட்டணங்களும் இன்றி இலவசமாக நடத்தப்படுவதுடன் பொதுமக்களுக்கு அரச அதிகாரிகளினால் இவ்வாறான அசம்பாவிதங்கள் எதிர்காலத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என்ற ஒரு விழிப்புணர்வாகவும் இந்த வழக்கு அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.